பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 மூலம் அவனுக்குச் செய்தி சொல்லி அனுப்பினான் பிரச்சோதன மன்னன். பிரச்சோதனன் தனக்கு அனுப்பிய செய்தி கேட்டு, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததென மகிழ்ந்தான் உதயணன். தத்தையைக் கைப்பற்றத் தானே அவன் அங்கே நிற்கிறான்? தக்க செய்தியை மன்னனும் அனுப்பிவிட்டான். இனிச் சற்றளவு தடையும் இருக்க நியாயமில்லை. ‘வானவெளி இடிந்து விழினும் வீழ்க, மன்னர் தத்தையைப் பற்றிச் சிறிதும் கலங்க வேண்டா. அவளைக் காப்பது என் கடன்’ என்று மறுமொழி கூறி அனுப்பி விட்டுத் தத்தை நீராடும் துறை நோக்கிப் பத்திராபதியை விரைவாகச் செலுத்தினான் உதயணன்.

தத்தை நீராடும் துறையை அடைந்த உதயணன், “இனி இவள் இங்கே சிறிது நேரமும் தங்குதல் நன்றன்று. என்னுடன் வருக! பிடியேற்றிச் சென்று தத்தையைக் காப்பது என் கடனென ஆணையிட்டிருக்கிறார் அரசர்” என்று அவள் ஆயத்தாரை நோக்கிக் கூறினான். அதைக் கேட்ட வாசவதத்தை நாணமும் மகிழ்ச்சியும் கலந்து கால் நிலங் கிளைப்பக் காதலுணர்வு மேலிடத் தலைகுனிந்து நின்றாள். நிறைக்கும் நாணத்திற்கும் அவளுள்ளே ஒரு பூசல் நடந்த வண்ணமிருந்தது. உதயணனை நினைந்தாலோ நெஞ்சம் உருகியது.

ஆனால் அவனோடு எப்படி யானையில் ஏறிப் போவதென நாணம் தடுத்தது. காஞ்சனமாலை என்ற தோழி தத்தையைத் தன் கைகளால் தாங்கிய வண்ணம் பிடியின் மீது ஏற்ற அருகே அழைத்து வந்தனள். தத்தையைக் கைகொடுத்து யானை மேலே தூக்கிப் பிடரியின் மீது ஏற்றிக் கொண்டான் உதயணன். ஒருவரை ஒருவர் கைப்பற்றியபோது அவர்களுக்குள் ஏதோ புரிய முடியாத இன்ப மயக்கம் புகுந்து விளையாடியது. பூங்கொடி ஒன்றை மேலே தூக்குவது போன்ற பொலிவையும் மென்மையையும் உதயணன் உணர்ந்தான். மனத்திலே கோயில்கொண்ட காதலனின் கரங்கள் மேலே எடுத்தணைப்பதைத் தத்தை உணர்ந்தாள்.