பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காப்பது என் கடன்

61

 திட்டங்களை ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டனர். சாங்கியத் தாயைப் பற்றி யூகிக்கு விரிவாகக் கூறி, அவளை மேல்நடக்கும் வினைகளில் நம்பிப் பயன் கொள்ளலாம் என்றான் உதயணன். அவளைப் பற்றிய விவரங்கள் யாவும் அடங்கிய ஓலை யொன்றையும் உதயணனிடமிருந்து யூகி பெற்றுக் கொண்டான். பின்னே துரத்தி வரும் படை நெருங்கிவிடவே யூகியிடம் விடைபெற்றுப் பிடியை விரைவாகச் செலுத்தினான் உதயணன். யூகி மக்கள் கூட்டத்தில் கலந்து மறைந்தான். முன்னர் ஏமாற்றப்பட்ட வராகன் இப்போது உதயணனைப் பின்தொடர்ந்த படையினர் முன்னணியில் நின்றான். போகின்ற போக்கில் பிரச்சோதன மன்னனுக்குச் சில செய்தி கூறிச் செல்கிறான் உதயணன். “பிரச்சோதனனிடம் இதுவரை நான் சிறைப்பட் டிருந்தேன். இழிவு கருதாத என்னைத் தன் மகட்கு யாழ் கற்பிக்கச் செய்தான். கற்பித்தேன். இவள்மேற் காதல் கொள்ள நேர்ந்தது. இன்று அவன் வாயாலேயே இவளைக் காக்குமாறு கூறினான். இவளை என் நாடு கொண்டு சென்று மணக்கக் கருதினேன். அம் மன்னனுக்கு என் வணக்கத்தைக் கூறுக” என்று இவ்வாறு வராகனுக்குக் கேட்கும்படி உரைத்து விட்டுச் சென்றான் உதயணன். வராகனுக்கு உதயணனாற் கூறப்பெற்ற இம் மறுமொழி கேட்டுத் தத்தை சற்றே சினங் கொண்டாள், காஞ்சனமாலையைக் ‘கீழே இறங்கிவிடுக’ என்னும் குறிப்புத் தோன்ற நோக்கினாள். அக் குறிப்பை அறிந்து கொண்ட காஞ்சனமாலை “கொடியூசலில் தோழியர் கைகோத்தாடினும் குரவைக் கூத்து ஆடினும் எம் தலைவி நடுங்குவள். சூறாவளிக் காற்றெனச் சுழன்று ஓடும் பிடியால் அவளுக்கு அச்ச முண்டாகிறது. பின் தொடரும் எங்கள் படையை ஒரு பொருட்டாக மதியாமல் நீவிர் பிடியை இத்துணை விரைவிற் செலுத்துவது என் கருதியோ? எங்கள் மனம் பயப்படுகிறது” என வணங்கிய கையுடன் உதயணனைக் கேட்டாள். அவர்களுடைய சந்தேகம் உதயணனுக்கும் புரிந்தது.