பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சினமும் சிந்தனையும்

65

சினம் என்பது வேகமாகப் பற்றிப் பரவும் காட்டுத் தீயைப் போன்றது. பண்பட்ட உள்ளம் படைத்தவர்கள்கூட அதற்கு மிகவிரைவில் உட்பட்டு விடுகின்றார்கள். பிரச்சோதன மன்னன் மிகச்சிறந்த நாகரிகப் பண்புடையவனாக இருந்தும் ஒரு நொடியில் தன்னை இழந்து சினத்திற்கு அடிமைப்பட்டு விட்டான். அரசன் நிலையையும் அப்போது அவனுக்கு இருந்த சினத்தினால் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் நன்கு அறிந்துகொண்ட அவனுடைய முதன் மந்திரி சாலங்காயணன், அமைதியாகச் சில அறிவுரைகளைக் கூறினான். “உதயணன் செய்தது என்னவோ தவறுதான்! அதற்காக அவனைச் சிறை செய்தலும் கிளைஞரிடமிருந்து பிரித்தலும் பெரிய காரியமல்ல. அவைகளை நீ விரும்பின் நின்னால் எளிதிற் செய்ய முடியும். ஒன்று நீ சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் வாசவதத்தைக்கு உதயணன் எவ்விதத்திலும் குறைந்தவன் ஆகான். குலம், குணம், நட்பு, நிலம் முதலியவற்றாலும் அவன் நின்னை யொத்த அரசனே. அவன் தத்தையைக் கொண்டு சென்று மணந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. ஊழ்வினை அவ்வாறு அமையும் போது அதனைப் பழிப்பதிலும் பயன் இல்லை. எனவே சினக்கொண்டு படையெழுப்புதல் சிறந்த வழி அன்று. மனத்தில் பகை இருக்குமானால் இப்போது அதை வெளிக்காட்டல் வேண்டா. பின்பு வேறு வழியாகத் தத்தையுடன் உதயணனை மீட்க முயல வேண்டும். உடனடியாக இவ்வாறு போர் மேற்கொள்வது அறிவுக்கு ஏற்றது அன்று” என்று விரிவாகவும் கருத்துள்ளடங்கியதுமாகச் சாலங்காயணன் கூறிய ஆறுதல் பிரச்சோதனன் மனத்தில் அழுத்தமாகப் படிந்து விட்டது. அமைச்சன் கூறிய ஆறுதலால் மனந்தேறிய பிரச்சோதன மன்னன், தன் கோப்பெருந்தேவிக்கு இச் செய்தி மற்றவர்களால் அறிவிக்கப்படுமுன் பக்குவமாகத் தானே சென்று அறிவிக்க விரைந்தான்.

இவ்வளவும் நதிக்கரையில் அரசனுக்கென அமைக்கப்பட்டிருந்த படமாடக் கோவிலில் நடந்தன. தேவியைக்

வெ.மு. 5