பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சினமும் சிந்தனையும்

67

இந்தக் கேள்வியினால் கோப்பெருந்தேவியின் திருவுளக் குறிப்பை அறிய விரும்பிய பிரச்சோதன மன்னன், அவள் மறுமொழி கூறாமலிருப்பது கண்டு இன்னும் தெளிவாக, “தத்தைக்கு யாழ் கற்பித்த பெருந்தகையன் உதயணனுக்கே அவளை மணம் செய்து கொடுத்து அவன் நாட்டிற்கு அனுப்பலாம் என்று கருதுகிறேன். நீ யாது கருதியிருக்கிறாய்? இது நினக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்திதானா?” என்று மீண்டும் கேட்டான். இக் கேள்வி மூலமே அவள் விருப்பத்தை அறியத் திட்டமிட்டிருந்தான் அவன். தேவி இது கேட்டு முகமலர்ந்தாள். அவள் உடன்பாடு அரசனுக்கு அம் மலர்ச்சியினாலேயே புலனாயிற்று.

“யானையை மதமடக்கி வந்த அன்று, முதன் முதலாக அவனைக் கண்டபோதே, அவன் இளமைபொலிவு என் மனத்திற் பதிந்துவிட்டது. அன்றே அவன் தத்தைக்கு ஏற்ற கொழுநனெனக் கருதினேன் யான். குற்றமற்ற அரசர் குடியிலே தோன்றிய கோக் குமரன் ஆதலின், அவனுக்குத் தத்தையை ஏற்கும் தகுதியிலும் குறைபாடில்லை” என்று மறுமொழி கூறினாள் கோப்பெருந்தேவி. அவள் மனம் உதயணன் தத்தைக்குரியவனாவதைத் தடுக்கும் நிலையில் இல்லை. மகிழவே செய்கிறது என்று தெளிந்தபின் பிரச்சோதனன் அன்று நடந்ததைக் கூறத் தொடங்கினான். “தத்தை வத்தவ குமரனொடு அவன் நாடு சென்றுவிட்டாள்” என்று மன்னன் கூறிய மொழிகள் திருமாதேவியின் செவிகளிலே நெருப்பென நுழைந்தன. பெண்ணைப் பிரிந்த பெற்றவள் பெருந் துயரங்கொண்டாள். ஆவி பதைத்து அழுதாள். ஆறாகத் துயரம் அவலமாக உருக்கொள்ள அரற்றினாள். தத்தையின் பிரிவு அவளை வாட்டியது.

அசுணம் என்ற விலங்கு இசையைக் கேட்டு இன்புறும்; பறையொலி கேட்டுத் துன்புறும். தத்தையை உதயணனுக்கு மண முடிக்கலாம் என்ற செய்தி கேட்டின்புற்ற தேவி, அடுத்து அவள் வத்தவ குமரனுடன் அவன் நாடு சென்றனள் என்பது கேட்டு அளவிட இயலாத துயரம் கொண்டாள்.