பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கூற்றுவனின் கொடும்பாசத்தால் தான் கட்டப்பட்டது போன்ற பயங்கரப் பிரிவுணர்ச்சி தத்தையின் பிரிவுச் செய்தி கேட்டபோது அவளுக்கு உண்டாயிற்று. பெற்றவள் அவ்வாறு துயர்கொண்டது பெருவியப்புக்குரியது அல்லவே? ஆயினும் பிரச்சோதனன் மகளைப் பிரிந்த மனத் துயரம் தீர அவளைத் தேற்றினான்.

“தாம் வேண்டும் காதற் கொழுநனோடு செல்லாது பெற்றோரிடத்துத் தங்கியிருக்கும் மகளிர் உலகில் எவ்விடத்தும் இலர். கடலில் பிறந்த முத்து அணிவோர்க்கு அல்லாமல் கடலுக்கு ஒருபோதும் பயன்படுவது இல்லை. தத்தையும் நமக்கு அப்படிப்பட்ட உரிமை மட்டும் உடையவள்தானே? இதற்காக நீ மிகவுங் கவலுதல் தகுதியுடைய செயல் அன்று” என்று அவன் கூறிய தேற்றுரைகள் தேவிக்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன. துயர் சற்றே விலகியது.

வான்மதி இழந்த மீனினம் போல, வாசவதத்தை இல்லாத துயரம் பெற்றவளை மட்டுமன்று, அந்தப் பெருநகர் முழுவதையும் பற்றி வாட்டியது. நீராடும் துறையில் காலையில் இருந்த ஆரவாரம் இப்போது போன இடம் தெரிய வில்லை. ஒரே சூனிய அமைதி குடிகொண்டிருந்தது. தூரத்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் தெரிந்த புகைப் படலங்கள் மேகத்தோடு கலந்து கொண்டிருந்தன. காற்றும் குளிரும் சூழப் பெய்துகொண்டிருந்த சிறு மழைகூட - வான் மகள், தத்தையின் பிரிவுத்துயர் பொறாது கண்ணிர் பெருக்குவது போலிருந்தது. மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட வான அரங்கின் வட்டவடிவமான கருநீலப் பெருவெளி எங்கும் துயர் நிறைந்து தோன்றியது, அந்த நகருக்கு. மன்னனும் திருமாதேவியும்கூட ஒருவாறு தத்தம் துயர வெள்ளத்தை மறந்துவிட்டனர்.

நீராட்டு விழா இன்பமயமாக ஆரம்பித்துத் துன்பமயமாக முடிந்துவிட்டது. முதலில் இன்பம். நடுவும் இறுதியும் துன்பம்.