பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. பகை நடுவே பயணம்

யூகியிடம் விடை பெற்றுக்கொண்டு, பின் தொடருகின்ற வராகன் முதலியோர் அடங்கிய படைக்குத் தப்பிச் சென்ற உதயணன் வேகமாக மேலே போக முடிந்தாலும் அந்நிலை நீடிக்கவில்லை. விரைவில் வேறோர் பெரும்படை தன்னைத் துரத்திப் பின்பற்றுவதை அவன் கண்டான். உதயணனிடமிருந்து செய்தி பெற்றுச் சென்ற வராகன் அதை அரசனிடம் கூறினான் என்பது மேலே விவரிக்கப் பெற்றது. அவன் கூறியது கேட்ட பிரச்சோதனன், சினங்கொண்டதும் சாலங்காயணன் அவனை அடக்கியதும் கண்டோம். பிரச்சோதனன், சாலங்காயனன் உரையில் ஆறுதல் பெறுவதற்கும் முன்பு செய்த சினக் கலவரத்தைக் கண்ட வராகன், பலர் குழுமிய ஒரு பெரும் படையுடன் மீண்டும் உதயணனைத் துரத்தினான். அதுதான் உதயணன் இப்போது கண்டபடை. இவ்வாறு தத்தையுடனே ஒருங்கமர்ந்து செல்லும் அந்த இன்பப் பயணமும் பகை சூழ்ந்த பயணமாகியது. நொடிக்கு நொடி அவன் சென்ற பிடியின் வேகம் அதிகமாகியது. அதை எவ்வளவு துரிதமாகச் செலுத்த முடியுமோ அவ்வளவு துரிதமாகச் செலுத்தினான் உதயணன். தேரும் யானையுமாகத் திரண்ட வெம்படை தன்னை மிகமிக நெருங்கி வருவதை உதயணன் உணர்ந்தான். அந்த நேரத்தில் சமயத்திற்கிடைத்த சஞ்சீவிபோல அங்கே தனித்தனியே மறைந்திருந்த யூகியின் படைவீரர் வெளிப்பட்டு உதயணனைத் துரத்தி வரும் படையை எதிர்த்தனர். உதயணன் இதற்காக யூகியை மனமாற வாழ்த்தினான். யூகியின் ஆட்களுக்கு வருகிற படைவீரர் களைப்பதற்குள் தான் முன்னேறிப் போய்விட வேண்டும் என்பது உதயணன் கருத்தாயிருந்தது. அதனால்தான் அவன் யானையை வேகமாக நடத்தினான். வந்தபடை யூகியின் வீரரால் எதிர்க்கப்பட்டுப் புறங்காட்டி ஓடியது. உதயணன் பிடி உஞ்சேனை நகருக்கு அப்பால் இரண்டு காததுரம் கடந்து விட்டது. அந்த நேரத்தில் கதிரவன் மெல்ல மலை முகட்டில் மேற்கே மறைந்து கொண்டிருந்தான். இருள் தொடங்கியது.