பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகை நடுவே பயணம்

71

பயின்று அறியாத தத்தைக்குத் துன்பம் கொடுத்தது. பிடி ஒவ்வோர் அடிவைக்கும் போதும் பூவினும் மெல்லிய அவள் உடல் குலுங்கி ஆடியது. அந்த ஆட்டம் உடல்வலியை உண்டாக்கிற்று. அது பொறாமல் நெட்டுயிர்ந்து அடிக்கடி விம்மினாள் வாசவதத்தை. பிடியின் புயல்வேகம் மெல்லியல் மகளாகிய தத்தைக்குச் சோகம் விளைத்தது. அடிக்கடி நெட்டுயிர்த்த தத்தையைக் காஞ்சனமாலை தழுவிக் கொண்டாள். அடிக்கடி பிடி குலுங்கிய வேகத்தில் தத்தை, உதயணனைத் தீண்ட நேர்ந்தது. ஆடவர் உடலைத் தீண்டி யறியாத கன்னி பயிர்ப்பு எய்தினாள். உடல் வலியில் விளைந்த சோகம் ஒரு புறம். உதயணனைத் தீண்டும் இன்பங் கலந்த சோகம் ஒரு புறம்.

தத்தையின் சினக்குறிப்பை, அவள் கூறாமலே தெரிந்து கொண்ட காஞ்சனமாலை, அவளைத் தாங்கிய வண்ணமே சில செய்திகளை மெல்ல அவளுக்குக் கூறினாள்: “உதயணன் உன்னை இன்னும் முறைப்படி நாடறிய நன்மணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவன் உனக்கு யாழ் கற்பித்த ஆசிரியன். ஆசிரியனாக இருந்ததுடன் உன் மனத்தைக் கவர்ந்த காதற் கள்வனுங்கூட. உனக்குப் பயிர்ப்பு ஏற்பட வேண்டியது அவசியமில்லை. உன் தந்தை தன் கைப்பட நின்னை உதயணனுக்கு மணம் செய்து கொடுக்கவில்லையே என்பது தான் குறை. ஆயினும் உன்னை அவன் தானாகவே அடைந்து விட்டான், ஒத்த தகுதியுள்ள இருவர் ஆசிரியனும் மாணாக்கியுமாக இருப்பின் மணத்திலேயே அந்தக் கலை நிறைவுறும் என்ற பெரியோர் வாக்கு, உங்கள் வரையில் மாற்றற்ற உண்மையாக மிளிர்கிறது. உனக்கு மயக்கத்தை உண்டு பண்ணும் பிடியின் வேகத்தில் சோகப்படாமல் தப்ப ஒரு வழி கூறுவேன்” என்றிவ்வாறு காஞ்சனை தத்தைக்கு உரைத்துப் பிடிசெல்லும் வேகத்தில் மேலும் கீழும் முன்னும் பின்னுமாகச் சுற்றியுள்ள பொருள்கள் சுழலுவதைக் காணாமல் கண்ணை மூடிக் கொள்ளுமாறு வேண்டினாள். அப்படிக் கண்களை மூடிக் கொண்டால் மயக்கம் ஏற்படாது என்றும் கூறினாள்.