பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

விளையும் என்று கருதியே உதயணன் இவ்வாறு செய்தான். அருட்ட நகரத்தை நெருங்கியதும் நகரின் வலப் பக்கமாக ஒரு பெருவழி சற்று ஒதுங்கிச் சென்றது. இடப் புறம் நகரை ஒட்டி அதேபோல் ஒரு வழி அமைந்திருந்தது. உடன் இருந்த வயந்தகன் உதயணன் நோக்கி, “இடப் பக்கமாகச் சென்றால் அருட்ட நகரத்தார் நம்முடைய செலவை அறிய நேரிடும். அதனால் நமக்குத் துன்பம் வரலாம். ஆகையால் ஒலிகளின்றி அமைதியாக வலப் புறம் செல்லும் பெருவழியிலே பிடியைச் செலுத்துக” என்றான். அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுக்கிக் கொண்டிருந்த நகரின் மாடப் பெருவிளக்குகள் இருளிடையே தெரிந்தன. கணீர் கணீரென்றுதேவ கோட்டங்களில் இருந்து மணியொலி எழுந்து பரவிய வண்ண மிருந்தது. உதயணன் வயந்தகன் கூறியவாறே பத்திராபதியை மெல்ல வலப் பக்கத்து வழியிற் செலுத்தினான். இடை யிடையே வயந்தகன் அங்குள்ள வழிகளைப் பற்றிய விரிவான செய்திகளை உதயணனுக்கு விளக்கிக் கூறினான். வழிகள் இரண்டாகப் பிரிவது மன ஒருமையில்லாதவர் களுடைய நிலையை ஒத்திருந்தது. வயந்தகன் துணை, வழி காட்டும் பெருந்துணையாக ஒளிகாட்டி அமைந்தது உதயணனுக்கு. நெடுநேரம் பயணம் செய்து கழிந்தபின் முல்லை நிலமொன்று எதிர்ப்பட்டது.

முல்லைக் கொடிகள், முல்லைநில மகளிர் இடை போலக் கொடி பரப்பி, நகை போல மலர்ந்து விளங்கின. குரவு தளவு குருந்தம் முதலியன மெல்ல மலர்ந்து தோன்றின. அவைகள் மலரும் செவ்வி நோக்கிக் காத்திருந்த வண்டுகள், மகிழ்ந்து தேன் விருந்துண்ணப் புறப்பட்டன. தினையும் சோளமும் வித்திட்டு விளைக்கும் முல்லை நிலமக்கள் அவற்றை வரிசையாகப் பயிரிட்டிருந்த காட்சி கவின் செறிந்து தோன்றியது. அந் நிலத்தில் விளையத்தக்க வேறு சில பல தானியங்களையும் பயிரிட்டிருந்தனர். முல்லை நில மக்கள் முயற்சிமிக்க பண்பினர் என்பதை அது விளக்கியது. கொல்லைப் புறங்களிலே மேய்ந்து கொண்டிருந்த முல்லை நிலத்துப் பசுக்கள் மடிநிறைந்த பாலைச் சேற்று நிலத்தில்