பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நறுமணம் பொருந்திய மலர்ச் சோலைகள் பலவற்றைக் கடந்து நருமதைக் கரையை அடைந்ததும் பின்புறமாக அமர்ந்திருந்த வயந்தகன் பிடியிலிருந்து கீழே இறங்கினான். நதியைப் பார்த்த வயந்தகன் தண்ணீர் அப்போது மிகுதியாக ஒடுகிறது என்பதை அறிந்துகொண்டான். பொய்ம் மணலால் உள்ளே ஆழ்த்திவிடாததும் சற்று ஆழம் குறைவானதுமான ஒரு பகுதியில் இறங்கி வயந்தகன் முன்னே வழிகாட்டி நீந்திச் சென்றான். பின்னே பிடிசென்றது. துக்க மயக்கத்தில் இருந்த வாசவதத்தையைக் கீழே நழுவவிடாதபடி இறுகத் தழுவிக் கொண்டு பிடியைக் கவனமாக ஆற்றில் செலுத்தினான் உதயணன். காஞ்சனை பின்புறமாகத் தத்தையைத் தாங்கிக் கொண்டாள். பிடி மெல்லக் கரையேறியது.

நருமதையின் அக் கரையை அடைந்ததும் வயந்தகன் நீரில் நனைந்திருந்த தனது உடலைத் துவட்டிக்கொண்டு பிடிமீது ஏறிக்கொண்டான். வானத்தில் விளங்கிய நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்கியபின் அப்போது இரவு எவ்வளவு நேரமாகி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறினான் வயந்தகன். பிடியின் நிலையும் அது கடந்த ஆற்றின் அளவும் இவை யாவும் சேர்ந்து, வயந்தகனுக்கு ஓருண்மையைப் புலப்படுத்தின. எப்படியும் பத்திராபதி இன்னும் ஓரிரண்டு காதம் செல்வதற்குள் தங்களைக் கைவிட்டு விடும் என்பதுதான் அந்த உண்மை. நருமதையாற்றிற்கு அப்பால் ஒரு பெரிய பாலைவனம், சற்றுத் தொலைவில் இருந்தது. அந்தப் பாலைநிலம் பயங்கரத்திற்குப் பேர் பெற்றது. அங்கங்கே தோன்றிய பருக்கைக் கற்களின் கரடுமுரடான தோற்றமும் ஒரே மணற் பெருவெளியும் அந்தப் பாலைவனத்திற்கு வந்து விட்டோம் என்பதை வயந்தகனுக்கு அறிவுறுத்தின. அவன் மனத்திற் சில அச்சங்கள் எழுந்தன. ‘சுமந்து வந்த யானை விரைவில் சோர்ந்துவிடும்’ என்பதைத் தவிர, அந்தப் பாலை நில வழியின் பயங்கரமும் வயந்தகனுக்கு நினைவு வந்தது.

கொடுமை, கொலை, கொள்ளை இவைகளுக்கு அந்தப் பாலை நிலவழி இருப்பிடம். அங்கே வசிக்கும் ஆறலை