பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேகத்தில் விளைந்த சோகம்

77

கள்வர் ஈவிரக்கமற்ற கொலைஞர். வழி ஓரமாக அமைந்திருந்த பாழடைந்த துர்க்கை கோயிலில் பதுங்கியிருந்து வழியில் வருவோர் போவோரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்துவது அவர்கள் வழக்கம். கொல்லப்பட்ட உடல்களைப் பருக்கைக் கற்களால் மூடிவிடுவார்கள். வெட்டுண்ட உடல்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர். அந்த வரண்டுபோன பாலை நிலத்தைப் போன்றதுதான் அவர்கள் உள்ளமும். கள்ளி, முள்ளி முதலிய பாலைநிலத்து மரங்கள் இடையிடையே வளர்ந்திருந்தன. குளிர்ப் பருவத்திலும் வெப்பக் கொடுமை தாங்க முடியாத இடம் அது. இத்தகைய துன்பங்கள் நிறைந்தது. ஆகையால் பொழுது புலர்வதற்குள் நல்ல இருளிலேயே அதைக் கடந்துவிட வேண்டுமென்று கூறினான் வயந்தகன். அதைக் கேட்ட உதயணன் பத்திராபதியை முன்னிலும் விரைவாக முடுக்கினான். பிடி காரெனக் கடிது சென்றது. அதன் அசுர வேகத்தில் வயந்தகன் கையிலிருந்த கோடபதி என்ற யாழ் கீழே வீழ்ந்து மூங்கிற் புதர் ஒன்றிலே சிக்கிக் கொண்டது. யாழ் விழுந்ததை வயந்தகன் உதயணனிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே, பிடி நூறு விற்கிடை தூரம் முன்னால் கடந்து சென்றுவிட்டது. பிரம சுந்தரமுனிவரால் தனக்கு அளிக்கப்பட்ட அற்புதமான தெய்வீக யாழாகிய கோடபதியை உதயணன் இழந்துவிட்டான்.

யாழைத் தவறவிட்ட இடத்தைக் கடந்து மிக்க தொலைவு வந்து விட்டதை அறிந்த உதயணன், “தந்த தெய்வம்தானே தரும்! அதற்காக மீண்டும் வழியில் திரும்ப முடியாது” என்றுரைத்துவிட்டுத் தயங்காமல் மேலே பத்திராபதியைச் செலுத்தினான். கோடபதிதான் உதயணனுக்குத் தெய்வ யானையைப் பணிபுரியச் செய்தது. நளகிரியின் மதத்தை அடக்கிப் பிரச்சோதனனிடம் நன்மதிப்புப் பெறவும், தத்தைக்கு யாழ் கற்பித்துக் காதல் கொள்ளவும் செய்தது. அந்த அரும் பொருள் கெட்டுப்போய் விட்டது. ஆனாலும் உதயணன் மனங் கலங்கினானில்லை. சிறு துயருக்கு வருந்திப் பெருந் துயரத்திற்கு நடுவே அகப்பட்டுக் கொள்ளக்