பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிடியின் வீழ்ச்சி

81

நிலையோ எழுந்திருந்து மேலே காலை ஒர் அடிகூட எடுத்து வைக்க ஏற்றதாக இல்லை. நடைப் பழக்கமே அறியாத பூங்கொடி தத்தை. காதலன் மனக் கருத்தறிந்து நடக்க உடன்பட்டு எழுந்தாள்.

தனது பஞ்சினும் மெல்லிய மலரடிகள் சிவப்பத் தத்தை காஞ்சனையைக் கைப்பற்றிக் கொண்டு துவளத் துவள மெல்ல நடந்தாள். வயந்தகன் வழிகாட்ட உதயணன் முன் சென்றான். நடக்க நடக்கத் தத்தையின் மெலிவு அதிகப்படுவது கண்ட உதயணன், வயந்தகனை உடனடியாக அங்கே தங்குவதற்கு ஒரிடம் பார்க்கப் பணித்தான். வயந்தகன் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் ஓரிடம் தேடினான். வாசவதத்தை சோர்ந்து உட்கார்ந்துவிட்டாள். பொழுதுவிடிந்து வெயிலும் ஏறத் தொடங்கியிருந்தது.

பக்கத்தில் பாறை பாறையாகக் கிடந்த கல் பகுதியினிடையே ஒரு நீர்ப்பொய்கை இருந்தது. அதன் கரையை ஒட்டிக் கோங்கிலவ மரங்கள் சில அடர்த்தியாக வளர்ந் திருந்தன. புதர்போலச் செறிந்து விளங்கிய அந்த இலவமரக் கூட்டம், வயந்தகன் நோக்கில் விழுந்தது. ‘மறைவாகத் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அதுதான்’ என்று தீர்மானம் செய்து கொண்டவனாய் அவன் அதை நெருங்கினான். மரங்களின் மேலே செந்நிறப் பட்டால் கூடாரம் அமைத்தது போலச் சிவந்த இலவம்பூ கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தது. புதருக்கு உட்புறம் ஒரு குகைபோல, இருப்பதற்கு வசதியாக அமைந்துள்ளமையைக் கண்ட வயந்தகன், அங்கே உதிர்ந்திருந்த சருகுகளையும் முள் பொருந்திய கிளைகளையும் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டுப் பசிய இலைகளைக் கொண்டு தைத்து ஆக்கப்பட்ட விரிப்பு ஒன்றைத் தரையில் விரித்தான். அதற்குள் உதயணனும் தத்தை, காஞ்சனை இவர்களும் அங்கே வந்தனர். யாவரும் அந்த நாளின் நண்பகற் பொழுதை மறைவான அவ்விடத்தில் கழிக்க விரும்பினர். பக்கத்திலிருந்த பொய்கையின் குளிர்ச்சி அங்கே அவர்களுக்குச் சற்றே சோர்வு நீக்கி இன்பம் அளித்தது.

வெ.மு. 6