பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஏற்பட்டது. சுற்றி வளைக்கும் பலர்க்கு இடையில் உதயணன் ஒருவனே பலராக நின்று, பலரோடும் போரிட்ட விந்தையை நினைக்க நினைக்க எதிரிகளுக்கே வியப்பூட்டியது. தங்கள் சாமர்த்தியத்தைத் தவிரப் பிறர் திறமையை வியப்பதை வாழ்க்கையில் இழிந்த பண்பாகக் கருதுபவர் அக் காட்டு வேடர். ஆனால், உதயணனைக் கண்ட பின்னர், அந்தக் கொள்கையைத் தாங்களாகவே அவர்கள் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. இவன் வெறும் மனிதன்தானா? அல்லது கூற்றுவனின் வேற்றுருவமோ?’ என்று ஐயுறவு கொண்டனர். வில்லையும் அம்பையும் அவன் பயன்படுத்தும் முறைகளில் புதிய புதிய நுணுக்கங்கள் அவர்களுக்குப் புலப்பட்டன. ஒரு நொடியில் சூழ்ந்துள்ள பலருக்கும் அதிர்ச்சி உண்டாகும் வண்ணம் கண்கள் சுற்றிச் சுற்றிச் சுழன்று பறக்கும் படியாக அவைகளை உதயணன் எய்த முறையை வியவாத வேடர் இல்லை. உள்ளே தத்தை முதன் முதலாக உதயணனின் போர்த்திறத்தைக் கண்டு காதல் உரிமை கலந்த மகிழ்ச்சியோடு வியந்து கொண்டிருந்தாள். போரின் அவசியம் தன் பொருட்டென்ற துக்கமும் அவளுக்கு இருந்தது.

வேடர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கோபமாக மாற்றிக்கொண்டு, புள்நிமித்தம் கூறிய முதிய வேடன்மேல் அதைச் செலுத்தினார்கள். பகைவனிடத்தில் அரும்பெரும் திறனைக் காண்கின்ற ஒவ்வொருவனும் அதை அதிக நேரம் வியக்க முடியாது. சற்று நேரம் தன்னை மறந்த நிலையில் தோன்றும் அந்த வியப்புணர்ச்சி வெகுவிரைவில் மிகப் பெரிய அசூயையோடுகூடிய பொறாமையாக உருப்பெற்று விடும். இது உலக இயற்கை மனித சுபாவமுங் கூட இந்த இயற்கைக்கு அக் காட்டு வேடர்கள் விதி விலக்கா என்ன? இல்லையே! மிக விரைவில் தங்களை உணர்ந்து சமாளித்துக்கொண்ட வேடர்கள் புள்நிமித்தம் சொல்லி யவனை வைதுகொண்டே தாக்குதலை வலுப்படுத்துவதற்கு அறிகுறியாக உதயணனை மிக அண்மையில் நெருங்கி வளைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.