பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேடர் கேடுகள்

89

எனவே, உதயணன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். விரைவாக உள்ளே சென்று தீப் பற்றாத ஒரு சிறு முடுக்கின் வழியே புறப்பட்டுக் கொண்டிருந்த தத்தையையும் காஞ்சனையையும் தானே அழைத்துக்கொண்டு புதரின் வாயிற் புறமாகவே வெளியேறினான் உதயணன்.

தத்தை, காஞ்சனை இவர்களுடன் அவன் புதருக்கு வெளியே சிறிது தொலைவுதான் நடந்திருப்பான். திடுமென்று முன்னேற்பாட்டுடன் பதுங்கியிருந்து தந்திரமாகச் சூழ்வதுபோல் வந்து வளைத்தது வேடர் படை. அப்போது தான் உதயணனுக்கு அவர்கள் சூழ்ச்சி நன்கு புரிந்தது. புதரிலிருந்து தன்னை வெளிப்படுத்துவதற்காகவே அவர்கள் அஞ்சியதுபோல நடித்து விலகியிருக்க வேண்டுமென்று அவன் உணர்ந்தான். முன்னும் பின்னும் பக்கமும் எங்குமே நெருங்கி வளைத்திருந்த படையையும் தன் வில்லையும் மாறிமாறிப் பார்த்தான் அவன். உதயணன் இவ்வாறு பார்த்த குறிப்பைப் புரிந்துகொண்ட வேடர்களில் ஒருவன் மிக்க மதியுள்ளவன். உடனே தன் வில்லில் அம்பு தொடுத்துச் சரியாகக் குறி வைத்து உதயணன் வில்லின் நாணை அறுத்து இரண்டாகத் துண்டித்துவிட்டான். கலைவல்லுநர் பலர் தம் கைத்திறம் விளங்கச் சமைத்த அந்த வலிய வில், நாண் அறுந்து தொங்கியது. சமயமறிந்து செய்த அந்த வேடனின் செயல் உதயணனைத் திகைக்கச் செய்தது. மேலே என்ன செய்வதென்று புரியாது திகைப்புடன் நின்றுகொண்டிருந்தான் உதயணன். வலையில் வீழ்ந்து கட்டுண்ட சிங்கம்போல இருந்தது அவன் நிலை. பாரதப் போரில் அபிமன்யுவைப் போலத் தனியாக நின்று, தன்துயர் நினைந்திருந்தான் அவன்.

துன்பங்கள் தொடர்ச்சியாக நெருங்கி வரும்போது ஆண்மையாளனுக்கு ஒர் அசாதாரணமானதுணிவும் ஏற்பட்டு விடுகிறது. சுற்றி நிற்பவர்களோ ஈவிரக்கமற்ற பகைவர்கள். கையில் இருப்பதோ நாண் அறுந்தபோன வெறும் வில் தண்டு. அச்சமும் வியப்பும் தோன்ற இனம் புரியாத துயரத்துடன் தத்தையும் காஞ்சனையும் அணித்தே நின்றனர்.