பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

சற்று மரியாதை கொண்டு, வேடர்கள் துன்புறுத்துவதை முற்றிலும் நீக்கிவிட்டனர். ஆயினும் புதைத்து வைத்துள்ள பொருட்குவையை எவ்வாறேனும் பறித்துக் கொள்ளவே விரும்பினர். பறித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் சிறிது மகிழ்ச்சியும் அடைந்தனர். வேடர் தலைவன், உதயணனை நெருங்கி அவன் மேலாடையாலேயே அவனுடைய இரு கைகளையும் பிணித்துப் “பெரும் பொருளைப் புதைத்த இடத்தைக் காட்டுக” என்று கூறினன். தங்களிடம் உதயணன் சரணடைந்து விட்டமைக்கு அறிகுறியாகவே மேலாடையால் உதயணனைப் பிணித்தான் எயினர் தலைவன். உதயணனும் தன் சூழ்ச்சி வெற்றியுறும் என்ற நம்பிக்கையில் அதனைப் பொறுத்துக் கொண்டான். உதயணன் மெளனமாயிருக்கவே நகைகளைப் புதைத்த இடத்தைக் காட்டுமாறு மீண்டும் அவனைத் தூண்டினான் வேடர் தலைவன். உதயணன் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தான். “நீங்கள் இட்ட நெருப்பின் நடுவே இருந்ததால் மிகவும் வருந்தியுள்ளோம். உடல்முழுதும் காந்துகிறது. நாங்கள் முன்பு தங்கியிருந்த பொழிலில் ஏதோ ஒரு பகுதியிலே பொருள்களைப் புதைத்தோம். தீயால் சிதைவுபட்டுத் தோன்றுகின்ற இங்கே, இப்போது அப் பகுதி எது என்று குறிப்பாகத் தெரியவில்லை. இதுவும் உங்கள் தீயினால் வந்த வினைதான். எனவே அந்த நெருப்பின் வேகம் சற்றுத் தணிந்து ஆறட்டும். ஆறியபின் நாங்கள் புதைத்த இடத்தைக் காட்டுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று தன்னைக் கூர்ந்து நோக்கும் வேடர் தலைவனின், கழுகுக் கண்களை ஊடுருவியவாறே தலைநிமிர்ந்து மறுமொழி கூறினான் உதயணன். அதற்கு உடன்பட்ட வேடர் தலைவன் “அழல் ஆறியபின் பொருள் புதைத்த இடத்தை நீ காட்டவில்லையாயின் கட்டப்பட்ட உன் கரங்கள் வெட்டப்பெறுவது உறுதி” என்று உதயணனிடம் கடுமையாக மொழிந்தான்.

வேடர் தலைவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தத்தை, தீயில் விழுந்த இளந்தளிரென மணவாட்டங் கொண்டு