பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மடியில் படுத்திருந்தது உதயணனை என்னவோ செய்தது. வேடர்களிடமிருந்து உதயணன் கைக்கட்டை அவிழ்த்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதுகண்ட தத்தை எழுந்தாள். காஞ்சனை விலகி நின்று கொண்டாள். தீப் புகையினாலும் நடந்த இளைப்பினாலும் வாடியிருந்த தத்தையின் முகத்தில் நாணங் கலந்த மலர்ச்சி பிறந்தது. அவளைத் தன் நீண்ட கைகளால் மெல்ல தழுவிக்கொண்டே ஆறுதல் கூறினான் உதயணன். குவளை மலர்களிலிருந்து முத்துதிர்வது போலத் தத்தையின் கண்களிலிருந்து சொரிந்த நீர் முத்துக்கள், உதயணனைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவாகத் தான் இருக்கவேண்டும். எப்போதும் மிகுந்த துன்பத்திற்கு இடையில் தோன்றும் மின்னல் நேர மகிழ்ச்சியில்தான் இன்பம் மிகுதி. கைக்கெட்டுகின்ற மல்லிகைப்பூவைக் காட்டிலும் நச்சுப் பாம்புகள் சூழ்ந்து வசிக்கும் இடத்திலுள்ள மனோரஞ்சித மலருக்கு மணம் அதிகமல்லவா? இங்கே இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் புட்பக நகரம் சென்ற வயந்தகன் நிலையை அறிய அவனைப் பின்பற்றுவோம்.

‘ஆருயிர் நண்பனும் அரசகுமாரனுமாகிய உதயணனைத் துன்பத்திற்குரிய சூழ்நிலையில் தனித்திருக்கச் செய்துவிட்டு வந்திருக்கிறோமே' என்ற கவலை ஒருபுறம். எதிரே மைக்குழம்பெனக் குவிந்துகிடந்த இருளில் புட்பக நகரத்தின் பாதை தெரியாது போயின துயரம் ஒருபுறம். விரைவில் இடவகனைச் சந்தித்துப் படையுடன் திரும்ப வேண்டுமென்ற பரபரப்பு ஒருபுறம். இவ்வளவும் சேர இருளைக் கிழித்து ஒடும் மின்னல்போல் முன்னேறிச் சென்றான் வயந்தகன். எதிரே புட்பக நகரத்தின் மாடமாளிகைகளில் ஒளி செய்த விளக்குகளும் பிறவும் தன்னுடைய கண்ணுக்குத் தெரிகின்ற அளவு நகரை நெருங்கிய பிறகுதான் வயந்தகனுக்கு உயிர் வந்தது. அப்போதுதான் பூத்த மல்லிகைபோலக் கீழ் வானிலும் கருமை நீங்கி வெளித்து உதயமாகக் கொண்டிருந்தது. வயந்தகன் புட்பக நகருள் நுழைந்து அரண்மனையின் கொடிமதிற் புறத்தை அடைந்தான். காவலர் அனுமதி