பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படை வந்தது!

95

பெற்று இடவகனைக் காண உள்ளே சென்ற வயந்தகன். ஒற்றன் ஒருவனிடம் ஏதோ தனித்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கே இடவகனைக் கண்டான். வயந்தகனைக் கண்ட இடவகன், ஒற்றனை அப்படியே விட்டு விட்டு ஆவலோடு முன்வந்து வரவேற்றான். தன்னை வரவேற்ற இடவகன் முகத்தில் தோன்றிய கலக்கமும் துயரமும், எது காரணமாக விளைந்தவை என்று வயந்தகனுக்குப் புலப்பட வில்லை. உதயணனுடைய நலத்தை விசாரித்த இடவகன் முகத்தில் பரபரப்புத் தோன்றியதும், உதயணன் நலமென்பதை அறிந்தவுடன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்ததும் வயந்தகனுக்குப் புதிராகவே இருந்தன. அந்தப் புதிரை இடவகன் அவிழ்த்தபோது வயந்தகனும் அவனோடு சேர்ந்து சிரிக்க நேர்ந்தது. ‘உதயணனுடைய ஊக்கம், உயர்ச்சி, ஒழுக்கம், கலைநலம் இவைகளை எல்லாம் கண்டு பொறாமை கொண்ட பிரச்சோதன மன்னன், உள்ளே ஈட்டி, வேல் முதலிய ஆயுதங்களைக் குத்திட்டு நிறுத்திய பொய்ந்நிலம் ஒன்றை அமைத்து, வஞ்சகமாக அதிலே வீழ்த்தி உதயணனைக் கொன்றுவிட்டான்’ என்று காட்டு வேடர் மூலமாகத் தான் கேள்வியுற்றதாகவும் அச் செய்தியே தன் துயரத்துக்கும் பரபரப்பிற்கும் காரணமென்றும் இடவகன் சொன்னபோது, வயந்தகன் வாய்விட்டுச் சிரித்தான். பொய் சொல்லுகிறவர்கள் எவ்வளவு அழகாக அதற்குக் கை கால்களை ஒட்ட வைத்து உண்மையைப்போல உருவாக்கி விடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வயந்தகனுக்கு வியப்பாயிருந்தது. தனது காரியத்தின் துரிதத்தை நினைவிற் கொண்டு வந்தவனாய், உதயணனுடைய அப்போதைய நிலையை அவந்தியிலிருந்து புறப்பட்டது தொடங்கி இலவம் புதரில் தங்கியிருப்பதுவரை விரிவாகக் கூறி, உடனே படையுதவி தேவைப்படுவதையும் விளக்கினான் வயந்தகன். அதோடு தன்னை நம்புவதற்காக உதயணன் கூறிய அடையாள மொழியையும் வயந்தகன், இடவகனிடம் அறிவித்தான்.