பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இடவகன் உடனே தன் படைகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான். படைகள் எழுந்தன. இடவகனும் வயந்தகனும் முன்சென்றனர். படை பின் தொடர்ந்தது, இடவகன் ஆணைப்படி படைகளுக்குப்பின் வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் உரியவாகப் பலவகை அலங்காரப் பொருள்கள் சுமந்து கொண்டு வரப்பெற்றன. அணிகலன்களும் பரிவாரமும் பணிப் பெண்களுமாக அக் கூட்டம் படைக்குப்பின் அமைதியாகச் சென்றது.

படை காட்டுள்ளே வந்துவிட்டது. முன் சென்ற வயந்தகனும் இடவகனும் இலவம்புதரை அடைந்தனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. புதர் எரியும் புதையுமாகத் தீப்பட்டுக் கொண்டிருந்தது புதருக்கு எதிரே உதயணின் அம்புக்கு இலக்காகிய வேடர்கள் சிந்திய குருதியும் நினமும் பரந்திருந்தன. மேலே அந்த நிணவிருந்தை எதிர்நோக்கிக் கழுகுகளும் காக்கைகளும் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த இலவம் புதரும் எதிரே தெரிந்த குருதிப் பரப்பும் கண்ட அவர்கள் உதயணனுக்கும் காட்டிலுள்ள வேடர்களுக்கும் ஏதோ போர் நடந்திருக்க வேண்டுமென்று உய்த்துணர்ந்தனர். ஆனால் உதயணனும் தத்தை, காஞ்சனை ஆகியோர்களும் தங்கியிருந்த இலவம் புதர் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்ததுதான் வயந்தகன் ஐயப்படக் காரணமாகியது. ‘ஒருவேளை உதயணன் தத்தை முதலியவர்கள் நெருப்பில் அழிந்து போயிருக்கக் கூடுமோ?’ என்பதற்குமேல் வயந்தகனால் நினைக்கவே முடியவில்லை. அவன் வாய்விட்டு அழுதே விட்டான். மேலே என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் அங்கேயே அயர்ந்துபோய் அமர்ந்து விட்டனர். உதயணன் முதலியவர்களுக்கு ஏதேனும் துயர்நேர்ந்திருந்தால் தாங்களும் நட்பை நிலைநாட்ட உயிர் விடுவதாகவே முடிவு செய்தனர். இடவகனும் வயந்தகனும். இதற்குள் பின் தொடர்ந்த படையும் அங்கே வந்து சேர்ந்தது.