பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114


எந்தவித வைத்தியத்துக்கும் அது இறங்குவதாகத் தெரியவில்லை, வீட்டில் இருந்தால் பார்வையாளர்கள், நண்பர்கள் தொந்தரவு அதிகம் என்பதால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்துவிட்டார்கள்.

குணசேகரின் மனைவி வற்றிய குளத்தில் கிடக்கும் தாமரையாக வதங்கிக் கிடந்ததைக் கண்டு. இன்பநாதன் பதறிப் போனார். அவருக்கு எப்படி சமாதானம், தைரியம் சொல்வது என்று அறியாமல் மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்.

குணசேகர் கட்டிலுக்கு அருகிலே அமர்ந்து வேண்டிய உதவிகளைச் செய்வது இன்பநாதனின் அன்றாடப்பணியாக ஆகிவிட்டது. அதாவது, குணசேகர் நன்றாக நலம் அடைந்து, வீடு திரும்பும்வரை, நான் வீட்டுக்கு போக மாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டவர்போல, இன்பநாதன் அங்கேயே இருந்தார்.

குணசேகர் எப்பொழுதாவது கண் விழித்துப் பார்ப்பார். ஆனால் எதையும் பேச மாட்டார்.

இன்பநாதன் அவரிடம் பேசி, அவர் மனச்சுமையை குறைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று எவ்வளவோ முயற்சித்தார் எல்லாமே தோல்வியாகவே முடிந்தது.

சிறிதுநேரம் கண்விழித்தால், இன்பநாதனேயே பார்த்துக் கொண்டிருப்பார். மனைவி இருந்தால், அவரைப் பார்ப்பார். ஆனால் அவர் எதுவுமே பேசமாட்டார். எதுவும் பேச விரும்பவில்லை.

குணசேகர் மனதுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார்.

பதிலும் கேள்வியும் புடைத்துக் கொண்டு எழுந்து குதிக்கத் தொடங்கினால், அவர் கண்களை மீண்டும் மூடிக் கொள்வார்.