பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

போதும்’ என்ற கதைபோல, இன்பநாதன் எண்ணமிட்டபடியே நடந்து கொண்டிருந்தார்.

யாரோ ஒருவர் குணசேகர் படுத்திருந்த அறைக்குள்ளே நுழைவது போல தோன்றியது. அந்த அறையிலிருந்தவாறே எட்டிப் பார்த்தார் இன்பநாதன்.

உள்ளே சென்ற அந்த உருவம் குணசேகரைப் பார்த்து ஸ்தம்பித்துப்போய் நின்றது. பிறகு கைகுவித்து வணங்கியது. அவரது கால்களைத் தொட்டுக் கும்பிட்டு, தன் கண்களில் ஒற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தது.

இன்பநாதன் என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்புடன் அந்த உருவத்தின் செய்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஏதாவது தவறாக நடந்தால் உடனே ஓடிப்போய் தாக்கி விடுவித்திட வேண்டும் என்ற ஒரு நினைவுடனும் தயாராக இருந்தார்.

குணசேகர் கண்களை மூடியவாறு படுத்திருந்தார், நல்ல காய்ச்சல். அவரை அறியாமலே அவரது வாய் எதை எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது. அவர் படும் வேதனைகளை பார்க்க சகிக்காமல் அந்த உருவம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கியது.

“அய்யா! ரொம்ப நாளைக்குப் பிறகு ஒங்களை பார்க்க வந்துருக்குறேன்யா! ஆனா நீங்க இப்படி ஆயிட்டீங்களே! இந்த நிலையில் உங்களை பார்க்கவா நான் ஓடோடி வந்தேன்... உங்க கனவை நான் நனவாக்கிட்டேன். இதோ பாருங்க, நான் ஆசியப் போட்டியில் ஜெயிச்ச தங்கப்பதக்கம்...