பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


இவர்களைப் போலவே பிஜித் தீவிலும் இளைஞர்கள் கட்சிகளாகப் பிரிந்து கொண்டு விடுகதை போடுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்குத் தோற்றவர்கள் விருந்து வைக்க வேண்டும்!

***

ஆப்பிரிக்காவில் மாகுவா என்று ஓர் இனத்தார் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு.

ஒரு பையனுக்கு அல்லது ஒரு பெண்ணுக்கு வயது வந்ததும், ஒரு சடங்கு நடத்துவார்கள். அந்தச் சடங்கில் அந்தப் பையனுக்கு அல்லது பெண்ணுக்குச் சில விடுகதைகளைப் போட்டு, விடை கூறப் பழக்குவார்கள். விடுகதைக்குச் சரியான விடை கூறத் தெரிந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்களுக்குக் கஷ்டமே இராதாம், எதையும் எளிதிலே சமாளித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் !

அங்கே இன்னொரு வகைப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்குகளில் தீர்ப்புக் கூற விடு கதையைப் பயன்படுத்துகிறார்கள்! ஒருவனைக் கைது செய்து நீதிபதியின் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், நீதிபதி நடந்தவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்பார். பிறகு சாட்சிகளை விசாரிக்கமாட்டார். குற்றவாளியாக நிற்பவனிடம் சில கடினமான விடுகதைகளைப் போடுவார். சரியான விடை கூறிவிட்டால், அவன் நிரபராதி.