பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



வாருகோல்

வாரு கோல்நல்ல வாரு கோல் நமை
வாழ வைத்திடும் வாருகோல் !
ஊரி லொவ்வொரு வீட்டை யுந்தினம்
உவந்து பெருக்கிடும் வாருகோல் !

ஆதி மனிதன்தன்னுடைமை யாகவே
ஆய்ந்து தேடிய வாருகோல் !
தீது செய்திடும் குப்பை கூளம்
தெரிந்து நீக்கிடும் வாருகோல் !

கோவி லாயினு மென்ன, கோமகன்
கூட மாயினு மென்னதான்
தேவையற்றிருக் கின்ற யாவையும்
தேடி நீக்கிடும் வாருகோல் !

பட்டுக் குஞ்சமுங் கேட்ட தாயொரு
பழிய தன்மிசை யேற்றினும்
குட்டை யாகிற வரையும் கூட்டுதல்
கொள்கை யாய்க்கொண்ட வாருகோல் !

ஈனத் தொழிலென உதுவு முலகினில்
இல்லை யென்ப தறிந்துதான்
ஞானி போலவே மெளன மாகஇந்
நாட்டுக் குழைக்கிற வாருகோல் !


வீட்டுக் கவசிய மான பொருளில்
விளக்கு மாறுமொன் றென்றுநம்
பாட்டி பகர்ந்ததைக் கேட்டு மொருசிலர்
பாவ மிதனை யிகழ்வதோ?

வாரு கோலிழி வான தென்றெவர்
வாய்தி றந்தினிப் பேசினும்
போருக் கதுவரக் கூடு முண்டதன்
பொறுமைக் கும்மொரு எல்லையே !

100