பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



கடமை

காடு கரைகளில் வாடும் பயிர்களைக்
கண்ட மாத்திரம் அண்டங் கலங்கவே
கூடி வந்திடி மின்மழை யாகியே
குளிரப் பெய்யும் முகில்குணம் கொள்கிறேன்.

குச்சில் வாழுங் குடிமகனாயினும்
கொள்கை யற்ற குழுவினர் கூலியைத்
துச்சமென்று கருதி யொதுக்கியே
துணிந்து மக்கள் பணியைத் தொடர்கிறேன்

மெத்த மெத்தப் பெரிய பதவியை
மேவி நிற்பவர், கேவல மாகவே
'பித்தன் பித்தனென் றேசி யிகழ்வதைப்
பின்மு னெண்ணிப் பெரிதும் வெறுக்கிறேன்.

பண்ணி நின்று பிறந்துநற் பாகுதேன்
பால்பழம்நறு நெய்யி னினித்திடும்
பெண்ணின் பருவப் பிணைப்பெனுங் காதலைப்
பெற்றுப் பெரிதெனப் பேண மறுக்கிறேன்;

உற்ற என்னல மோம்புவ தொன்றுதான்
உலகில் தன்கட னென்று கருதிடும்
பெற்ற அன்னையி னன்புத் தளையெனும்
பிணிப்பை மெல்லப் பிரித்துக் களைகிறேன்

தொல்லை கோடியுண் டாயினு மச்சமோர்
துளியு மின்றியே தூய மனத்தொடும்
வில்லி னின்று விடுபடு மம்பென
வீட்டை விட்டு வெளியில் விரைகிறேன்

குச்சில் குடிசையில் கூர்ந்த இருட்டினில்
குடிக்கக் கூழுமில்லாமல் குமுறியே
அச்சோ ஆ வென் றழுது வடித்திடும்
அவல மக்கள்கண் ணிரைத் துடைக்கவே !

102