பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

ஆறுதல்

கண்க லங்க வேண்டாம் - கரைந்து
கவினி ழக்க வேண்டாம் !
பெண்க ளாண்க ளெல்லாம்-நெஞ்சம்
பேத லிக்க விட்டே !

வெய்யி லில்வி ரைந்தோர்-வேட்கை
விலக்க வேண்டு மென்றே
நொய்யல் பொன்னி வைகை - நதிகள்
நோன்பு நோற்கு தென்பர் !

மாலை வேளை முதலாய்ப் -
பெய்து மல்கி விட்ட பனியைக்
காலை வேளை கதிரோன்-தோன்றிக்
காய்ந்து நீக்குகின்றான்.

வந்தபோது மேடாய்-நம்மை
வருந்த வைத்த வழியே
விந்தை யான தணிவாய்த் - திரும்பின்
வேறு பட்டிருக்கும் !

அகம்வருந்த எதிரில்-அலறி
அழுங்குழந்தை நாளை
நகைமுகத்தினோடும் - மழலை
நமக்க ளிப்பதுண்டு !

இரவி லாது பகலாய்ப் - பாரில்
இருந்த தில்லை யென்றும்
உருளை யின்புறங்கள் - போலும்
உலகி லின்ப துன்பம் !

விதிவெறுத்த போதும் தீயர்
வினைவருத்தும் போதும் தீயர்
கதிக லங்க வேண்டாம் - கற்ற
கல்வி யைமறந்தே

111