பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


திருந்துகை

மிகமிகமேம்பட்டுலகில் வாழ்தற் கென்றே
மெய்வாய்கண் மூக்குசெவி மேவப் பெற்றும்,
சுகமதனைக் காணாது சுயந லத்தால்
சுடுகாட்டுச் சுமையாகச் சுருங்கிக் கெட்டோம் !
நகைமுகமும் நடுநிலையும் நட்பு மில்லார்
நலமுற்று வாழாரென்றறிவாய் தம்பி !
அகஞ்சுருங்கி முகங்கோனு மவல வாழ்க்கை
அகிலத்தில் அகற்றிடுவோ மினிமே லேனும் !

நல்லெண்ணம், நன்னடத்தை, கல்வி, கேள்வி நாடிநமை நாமுயர்த்தி நலங்கா ணாமல், புல்லெண்ணம், புலை, களவு, பொய்பொ றாமைப்
புல்பூண்டுக் களைபொருந்திப் புலம்பிக் கெட்டோம்
சொல்லெண்ணம் செயலென்னும் மூன்றுமொன்றாய்ச்
சுதந்தரத்தை யுயிர்போலச் சூழ்ந்து காத்துச்
செல்லுண்ணும் மரமென்னத் தேய்ந்த வாழ்வைச்
சீராக்கி வாழ்ந்திடலா மினிமே லேனும் !

மடங்கொன்று மதியூட்டி மகிழச் சொந்த
மாதர்களின் வாழ்வுக்கும் மணமுண்டாக்கி,
 அடங்காதும் அடக்காதும் பிறரை நேசித்
தானந்த மடையாதே யலைந்து கெட்டோம்
படங்கொண்ட பாம்பின்வாய்த் தேரை போலப்
பாமரராய்ப் பட்டதுயர் போதும் தம்பி
திடம்மிகுந்த தேசுடைய மனிதராகித்
திகழ்ந்திடநாம் திருந்திடுவோ மினிமே லேனும்

புவிமீதி லுள்ளதனைப் பொதுவாய்ப் பங்கிப்
புசிக்கின்ற நல்லொழுக்கம் புரியா திங்கே
அவனைவிட எனக்கதிகம் வேண்டு மென்றே
அநியாயம் செய்துநனி அழிந்து கெட்டோம் !

114