பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

அல்லிக்குளம்

குவளை யல்லி மலர்கள் பூத்த
குளமி ருந்ததாம் !- அதில்
தவளை யாமை நண்டு மீன்கள்
தங்கி வாழ்ந்ததாம் !

கட்டு திட்ட மாக யாவும்
கலந்து வாழவே - ஆமை
சட்ட சபையில் தலைமை தாங்கச்
சம்ம தித்ததாம் !

தில்லு முல்லு வழக்கைத் கேட்டுத்
தீர்த்து வைக்கவே - நண்டு
நல்லநீதி பதியுமாக
நயந்து கொண்டதாம் !

தக்க வாறு குளத்தி லாட்சி
தழைத்தி ருக்கவே - சூரக்
கொக்கைக் காவல் சேவ கத்தில்
கொண்டு வைத்ததாம் !

சாத்திரங்கள் கற்ற றிந்த
சமர்த்து வாத்தையே - சதா
வாத்தி யாரின் வேலை பார்க்க
வரவ ழைத்ததாம் !

கூட்டம், விழாத் திருமணக்
குதூக லங்களில் - இசைப்
பாட்டுப் பாடத் தவளை யாரைப்
பணித்து விட்டதாம் !

இத்தனையும் செய்து வைத்தும்
இராச்சி யத்திலே - மீன்கள்
மொத்தமாகச் சுகமிழந்து
முணுமு ணுத்ததாம் !

122