பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



வானம்


எல்லையற்றுப் பரந்தெழி லாகியே
இனிய நீர்நிலம் காற்று நெருப்பெனும்
வல்ல பூதங்கள் நான்கும் வகுத்துமவ்
வகையில் தானுமொன் றனது யாதடா?

மெச்சும் வண்ணச் சிறகு விரித்துநீள்
மேகந் தோய மிகுந்த விரைவுடன்
பச்சைக் கிளிகுயி லாதி பறவைகள்
பறந்து பரவசப் படுவது மெங்கடா?

போற்றும் மென்மலர் தம்மை யளாவியே
பொதிந்து வீசிக் கமழும் மணத்துடன்
ஆற்றும் சீர்வரி வண்டினமுதமாம்
அரிய பண்ணுகர் விப்பது யாதடா?

சின்னஞ் சிறு துடி யிடையி லுடுத்திய
செல்வத் திருமகள் நீலத் துகிலிடை
பொன்னின் பூப்பல புத்தன போலவே
புகழும் மீன்கள் பொலிவுற லெங்கடா?

பஞ்சம் பிணியிவை மிஞ்சி வராமலே
பல்வ கைப்பயிர் பண்ணிப் பிழைத்திட
மஞ்சு சூழ்ந்து தடிந்து முழங்கியே
மழையை மண்ணில் மடுப்பது யாதடா?

தேனைப் போன்று திளைத்துக் களித்திடத்
திரு வுடற்கண் நிலவை விரித்தொரு
கானில் யானையின் கோடு கிடத்தல்போல்
கண்கவர் பிறைகாண்பது மெங்கடா?

சோதி நீள்கதிர் பேரொளி காட்டியே
சூழும் பாழிருள் நீக்கித் துலக்கிடும்
ஆதவன் வரும் வீதியுமாயுயிர்க்
கனைத்து மாகி யளிக்குமவ் வானடா !

123