பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்

முகில்

விண்ணக மெங்கும் விளங்கிப் பரந்து
விரையும் கருமுகிலே - நீயும்
மண்ணக மெங்கும் புஞ் செய்களை மட்டும்
மதிக்கத் தவறுகிறாய் !

ஏழை குடித்திடுங் கூழுக்கு வேண்டி
யிருப்பது புஞ்சை நிலம் ! - சொந்த
மேழி பிடித்தன்றி வாழக்கற் காமல்
மெலிந்த உழவ னவன் !

உடலி லிருந்து வியர்வை ஒழுக
உழுது விதைத்து வைத்தான் - ஒட்டும்
குடலி லருந்து பசியுங் குடையக்
குனிந்து களையெடுத் தான் !

கம்பும் வரகும் கறுகி யுலர்வது
கண்டுங் காணாததுபோல் - நீயும்
தெம்பு மிகுந்த கரும்புநெல் லெங்கெனத்
தேடித் திரிந்திடு வாய் !

'என்செயலாவ தெதுவொன்று மில்லை
யினி' யென வேயிரங்கி - இந்தப்
புஞ்செய் யுழவன் புலம்புதல் கூடவுன்
போக்கில் புரிந்துகொள் ளாய் !

மெத்தப் பசியுடன் கத்துங் குழந்தையை
மேலும் தவிக்கவிட்டுத் - தாயும்
நித்திரை செய்யுங் குழந்தைக் குணவிடின்
நேர்மை யெனப் படுமோ ?

எண்ணற்ற கண்க ளிருக்கு முனக்கென்
றியம்புகின் றாரெனினும் - ஞானக்
கண்ணொன்று கூடவுனக்கிலை
யென்பது காண முடிந்த தின்றே. !

124