பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞன் வெள்ளியங்காட்டான்


மலை மடந்தை


பருவ காலத் தருணி யாகிப்
பருவ தம்து லங்குது !
புருவ நடுவில் திலகமாகிப்
பொழுதி ருந்தி லங்குது !

கருத்த கூந்தல் விரித்த தென்னக்
கவிந்து மேகம் தவழுது !
பொருத்தங் கண்டு சிரித்த தென்னப்
பொழியும் மின்னல் துவளுது !

உரிய கணவன் பிரிவை யுன்னி
உருகக் கண்ணிர் பெருகுது !
அரிய சுனைகள் மருவித் துன்னி
அருவியாகி வருகுது !

விரக மாகி மருகிப் புகலை
விரும்பி வெட்கி நின்றது
மரக தப்புல் லுருவில் முகிலை
மருவும் செயலு மொன்றுது !

பெருமை யடைய அருமை மகவைப்
பெற்று வைத்துக் கொண்டது,
பரும னுடைய கருமை யானை
பாங்கி லொத்துக் கொண்டது!

தருண முதிக்க தரிக்கும் பவளத்
தங்க நகையும் தெரியுது !
அருண னுதிக்க மரங்கள் துவள
அழகு மலர்கள் விரியுது !

பருவ தத்தைத் தருணி யாக்கிப்
பார்த்து வக்கும் முன்னமே
இருவு தித்து மறைத்த ததனை
இதய மையோ வென்னவே !

127