பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



மீன் கிணறு


ஊருக் கருகில் தோட்டக் கிணறொன்
றுண்டு நீர்நிறைந்ததில்
நீரி ருந்து மில்லை நேர்ந்து
நீந்தி வாழும் சீவனே !

குப்பன் குளத்தி லிருந்தி ரண்டு
குஞ்சு மீன்கள் கொண்டுவந்து
ஒப்பி நன்கு வாழுமென்று
வந்த தற்குள் விட்டனன்!

ஆண்டி ரண்டு முடிவ தற்குள்
அருமை மீன்கள் ஆசையாய்
மூண்டு வாழ்ந்து குஞ்சும் பொரித்து
மொய்த்துப் பல்கிப் பெருகின !

வானமீன்கள் வந்து கூடி
வாழ்வ தொத்த கிணற்றினை
மீனுக் குரிய குப்பன் வந்து
மெல்ல எட்டிப் பார்த்தனன் !

உழுது வித்தி யுரமி டாமல்
ஊறும் நீரி லுபரியாய்க்
குழுமி யுள்ள மீனின் செல்வம்
கூர்ந்து பார்த்து மகிழ்ந்தனன் !

மிகவும் நன்று நன்றி தென்று
மீசை மெல்ல முறுக்கிவிட்டு
அகங்கு விர்ந்த ழைத்தனன்தன்
அண்டை யயலுள்ளோர்களை !

பொருத்தங் கண்டறிந்து செய்யும்
போது சிறிய செயலிலும்
பெருத்த லாப முள்ள தென்று
பேசிக் காட்டக் குப்பனே !

128