பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்பான்

தாலாட்டு

தூங்கி விழித்தெழுக : - கண்ணே
தூமலர்த் தொட்டிலில் நீ!
'கோங்கு மலரில்துயில்- கொண்ட
குஞ்சுச் சுரும்பென வே'

முல்லை யரும்பனைத்தும்-மலர்ந்து
முன்றில் கமழ்கையிலுன்
சொல்லின் சுவையருந்திக்-குயில்
சோகம் மறந்துறங்கும் !

கன்னல் தமிழ் பயின்று-கூண்டில்
கனியைப் புசித்த கிளி
தன்னை மறந்துறங்கும் - நீயும்
தாமரைக் கண்வளராய்

மாமரச் சோலையிலே-புள்ளி
மானின் மகவும், மலர்க்
காமர வண்டிசையில்-சொக்கிக்
கண் துயில் கொள்கிறதாம் !

தெற்கி லிருந்துவரும்- தென்றல்
தேமலரில்திளைத்து
நிற்கும் நிலைத்தினியுன்-தொட்டில்
நீள அசைத்திட வே !

கிழக்கிலிருக்குமெழில்-கேள்விக்
கீதம் பயின்ற கடல்
பழக்கும் பசுந்தமிழில்-பாகாய்ப்
பண்கள் மிழற்றிடவே !

மேற்கு மலைமிசையே-மென்றளிர்
மெல்லணை மேலயர்ந்து,
ஏற்கன வேயிறங்கும்-வெய்யோன்
எழும்பும் வரையினிதே ! (தூங்கு)

155