பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


சிந்தனை


சிந்தனை செய்வதுதான் - நமது
செயல்களில் சிறந்த செயல்!
விந்தைகள் விளைவிக்கச் - சிந்தனை
வேரென விளம்புகிறார்.

நிந்தனை நீங்கிடவும் - நிலத்தில்
நெறிமுறை நின்றிடவும்
சிந்தனை செய்வதுதான் - சிறந்தோர்
செய்திடும் முதல் செயலாம்

தந்தையி னும் அதிகம் - அன்புத்
தாயினும் நனி யதிகம்
சிந்தனை நன்மை செயும் - அரும்பெரும்
செயல்களைச் செய்திடவே !

சந்திர னில்லையெனில் - வானம்
சாந்தியை யளிக்காது !
சிந்தனை யில்லையெனில் - மனிதன்
செப்புக் காசுபெறான் !

வந்தனை வழிபாடு - அமர
வாழ்வு மற் றவையாவும்
சிந்தனை செய்பவனைத் - தேடிச்
சேர்ந்திடும் சிறப்புறவே !

எந்திர சாதனைகள் - ஏற்ற
இனியகற் பனைக்கலைகள்
தந்திரம் தவமெதற்கும் - சிந்தனை
தாயெனச் சாற்றிடுவர்

சிந்தனையே சக்தி - சிறந்த
சிந்தனையே யுக்தி,
சிந்தனையே பக்தி - செய்த
சிந்தனையே முக்தி !

162