பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


ஆக்கம்

மடங்கல் தனைப்போலும் - மங்கா
மதியி னொளி போலும்
உடலை யுரமாக்கு - உனது
உளத்தை விரிவாக்கு !

அடுத்த பொழில் போலும் - மலரில்
அவிழ்ந்த மணம் போலும்
இடத்தை யெழிலாக்கு - உனது
இயல்பை வெளியாக்கு !

கடல்வெண் னுரைபோலும் - உருகிக்
கமழும் நெய் போலும்
உடையைத் துவைத்தாக்கு - உனது
உரையைச் சுவையாக்கு !

புடத்தில் பொன்போலும் - உண்மைப்
புலவன் கவிபோலும்
நடத்தை நலமாக்கு - உனது
நட்பை நிலையாக்கு !

நடுமை யகம் போலும் - மகவின்
நகைத்த முகம் போலும்
கடமை கருத்தாக்கு - உனது
கலையைக் கவினாக்கு !

குடையும் நதிபோலும் - பளிங்காய்க்
குளிர்ந்த நீர்போலும்
புடவி பொதுவாக்கு - உனது
புலமை புவிக்காக்கு !

படிப்பின் பயன்போலும் - பருதி
பகைத்த பனி போலும்
குடியைக் குண மாக்கு - உனது
குறையை யற நீக்கு !

163