பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


நாட்டம்

நல்ல வழிகளில் செல்லவே
என்மனம் நாடுது - என்றும்
நன்மைக் குறைவிட மானவர்
தம்மையே கூடுது !
புல்லர் புரட்டர்க ளென்றுகண்
டால்மிக வாடுது - பூமி
பொன்பொருள் யாவினும் தன்மதிப்
பொன்றையே தேடுது !

அவனை யிவனைச் சுரண்டும்
பிழைப்பை வெறுக்குது ; - பிறர்
'அடிமை யெனுங்குரல் கேட்கவே
கோபம் பிறக்குது'
எவனையு மேயிழி வென்று
நினைக்க மறுக்குது ; - என்றும்
இயன்ற அளிவி லுதவிகள்
செய்யப் பறக்குது !

புகழ்ந்திடும் வோர்களைக் காணவும்
என்னுளம் கூசுது ; - ஒரு
பூவெனப் பேரறி ஞர்தமை
யென்னுயிர் மூசுது
மகிழ்ந்திட வேண்டின் மகவென
வாழவும் பேசுது ; - மண்ணில்
மானாபி மானமில் லாமலே
வாழ்வதை யேசுது !

அடங்கி நடக்கும் வழக்கமென்
நெஞ்சை யிடிக்குது ; -உண்மை
அன்பறிவாற்ற லுறுதியென்
றெண்ணிப் படிக்குது !
மடங்கலைப் போல நிமிர்ந்து
நடக்கப் பிடிக்குது - நல்ல
மட்டு மரியாதை பெற்றுயிர்
வாழத் துடிக்குது !

165