பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


உயர்வு

நமையுயர்த்திட லாமென்னாளும்
நமையு யர்த்திடலாம் !
தமையுயர்த்துவ தும்த மக்கொரு
தரும மென்றிடலாம் !

அறிவி ருப்பதன் பயனனைத்தையும்
அலசி யறிவதாம் !
திறமி ருப்பதன் பயன னைத்தையும்
திருந்தச் செய்வதாம் !

துயர மூட்டுந் தாழ்வுக் கெல்லை !
தோன்றப் பயிலலாம் !
உயர்வுக் கெல்லை யில்லை மேலும்
உயர முயலலாம் !
சுற்றஞ் சூழ நட்பு கெழுமச்
சுகத்தைக் காணலாம்
குற்றங் குறைகள் கூட்டி யெறிந்து
குணத்தைப் பேணலாம்

ஊழ்வி னைநமைப் பாழ்ப டுத்துமுன்
உதறி யெறியலாம் !
வாழ்வில் புகழை யொளிர நிறுவும்
வகையை யறியலாம் !

கவலை தீர்ந்த நிலையில் நமது
கருத்தை யுறுத்தலாம் !
அவலம் தீர்த்திவ் வுலகம் போற்றும்
அமைதி நிறுத்தலாம் !

அமரராக லாம தன்றெனில்
அரங்க ராகலாம் !
நமது செயலின் நன்மை தீமை
நமைய மைக்கிறதே !

166