பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


சத்தியம்


பாத்திர மான பலரும் படித்துப்
பரவசப் பட்டுப்பா ராட்டுகிற
சாத்திரங் கட்கொரு நேத்திரம் போன்றது
சத்திய மொன்றெனச் சாற்றிடுவார் !

எத்தனைக் கெத்தனை சிந்தனை செய்யினும்
எத்தனை பேரை வினவிடினும்
இத்தரை மீதினில் சத்தியத் துக்கிணை
சத்திய மென்பதுவே விடையாம் !

அச்ச மனுவள வேனுமில் லாதது
அன்பு கலந்தழ காகியது
குச்சினில் வாழவும் வல்லது கூர்ந்து
குவலயம் ஆளவும் வல்லதுகாண் !

கூட்டியெடுக்கிற தோட்டி யெனினுங்
குறைத்து மதிப்பது மில்லையது !
நாட்டினை யாளு மரச னெனினும்
நயந்து துதிப்பது மில்லையது !

புத்தகம் பற்பல கற்றுத் தெளிந்த
புலவ ரிதயம் புகலிடமாம்,
மெத்தப் பெரிய அறிஞர் செயல்களை
மேவி நிலைத்து மிளிர்வதுவாம் !

சொத்து சுகமதி கார மனைத்தினும்
சோதியாய் நம்மைத் துலக்கிவிடும்
சத்திய மேநெறி சத்திய மேயறம் !
சத்திய மேகுறி யாவதுவாம் !

உத்தமர் தங்க ளுடனுற வாடி
யுலுத்தரையோர மொதுக்கிவிட்டு
நித்திய மாணஇச் சத்திய மோங்கி
நிலவுக என்றும்நம் நெஞ்சினிலே !

168