பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


அறிவு



தாயெனவேயொரு வார்த்தை தளர்ந்து
தவிப்பவர்க் குரைத்திடுவேன் - நாம்
ஆயுளி லொருமுறை யாயினு மில்லைநொந்
தழவேண் டியநேரம் !

அரியதோரவயவ மரியதோர் செயல்முறை
அரியதோ ரறிவமைந்தே - நாம்
உரியதோருலகினி னுளமகிழ்ந் திடவுறைந்
துவப்பவ ராயிடுவோம் !

அறிவதை யறிந்துநன் கழகுடன் செய்திடின்
அவலமு மனுகாது - நாம்
பெறுவதைப் பெற்றபின் பிழையறப் பேணிடின்
பிணக்குகள் பெருகாது !

அகலமு மாழமு மாகவே நீர்நிலை
அலைக ளடித்திடினும் - நாம்
சுகமுடன் கடந்திட லாமதில் நீந்திடும்
சூக்கும மறிந்திருந்தால் !

வஞ்சனை வசைமொழிவாது வழக்குகள்
வளர்ப்பவரில்லையெனில் - நாம்
பஞ்சமும் பகைபிணி பட்டினி யிழவெனப்
பயப்பட நேராது !

உற்றவர் வாழ்வினி லுற்றது நலமென
உள்ள முவந்திடலாம் ! - நாம்
மற்றவருற்றிடுந் துயர்களைப் பரிவுடன்
மாற்றி மகிழ்ந்திடலாம் !

சாதியும் சமயமும் சாமியும் நீங்கிய
சமத்துவ வாழ்வினிலே - நாம்
நீதியில் நிலைத்தொரு பேதமு மின்றி
நிறைந்தினி வாழ்ந்திடவே !
(தாயென)

169