பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


நாணயம்

என்னி யல்பிவை யென்ன இயக்கும்
இதயத் துறுதிகளை - என்றும்
பொன்னை யொத்த புனிதப் பொருளெனப்
போற்றிப் புனைந்திடுவேன் !

'ஆணும் பெண்ணுமென் றானவர் தம்மை
அளந்து தரமமைத்தல் - அவர்தம்
நாண யம்மெனச் சொல்லுவர் நாடியே
ஞாலத்து நல்லறிஞர் !

நாழி கைப்பொழுதில்லிழக் கும்சுய
நாணயத் தைநயந்து - பின்நம்
வாழும் காலம் முழுதும் வருந்தினும்
வாழ்வில் பெறுவதில்லை !

உள்ள மொன்று புறமொன்று மாயின்
உலக முணர்ந்துவிடும் ! - கண்டோர்
'கள்ளன் கள்ள' னென் றெள்ளுவ தேயதன்
கைம்மாறு மாகிவிடும் !

உருகும் நல்லியல் புள்ள வுளத்தோ
டுயர்ந்தவ னாய்ப்பிறந்தோன் - ஓரா
மிருக மென்ன யிறுகிடு வானெனின்
மேன்மை யிழந்திடுவான் !

பச்சைப் பயிரினம் முற்றிப் பயன்படும்
பான்மையைப் போல் மனிதன் - பலரும்
மெச்ச வாழ்ந்துயிர் மேன்மை யடைவதே
மெய்யின் மிகுபயனாம் !

மனிதன் நாணய மொன்றினை மாத்திரம்
மண்ணி லிழந்துவிடின் - அந்தோ !
இனியி ழப்பதற் கில்லைவே றொன்றவன்
எல்லா மிழந்தவனே !

170