பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


தகுதி

ஒவ்வொரு நாளா யோயாமல்
ஒடித் தொலையுது நம்வாழ்நாள் !
எவ்வித மிருந்தினிக் கழிப்பததை
என்பதையெண்ணி யியம்புகிறேன்.

பகைமை யெனும்பிணி யணுகாமல்
பண்புடன் நன்மொழி பகர்ந்திடுவேன்;
தகைமை யெனும்பொருள் தவறாமல்
தனிமையில் நின்று திரட்டிடுவேன்.

இகழினும் புகழினுமொருபொருளாய்
இதயந் தனிலதை யிருத்தாமல்,
அகம்புற மிரண்டிலு மமைதியுடன்
அறங்கடைப் பிடித்தினி யொழுகிடுவேன்.

நண்பனு மன்பனு மென்னாமல்
நடுநிலை யுடன்நலம் நாடிடுவேன்;
பண்பினில் வருவது துயரெனினும்
பாங்குடன் பற்றி யியங்கிடுவேன்.

நடைமுறை நியதிக ளெதனையுமே
நன்கறிந் தலசியா ராய்ந்திடுவேன்;
கடமையைச் செய்து முடிப்பதிலென்
கால மனைத்துங் கழித்திடுவேன்.

நெருப்பெனக் கொளுத்திடும் வெயிலெனிலோ
நீரென அக்கணம் மாறிடுவேன்;
பொருப்பினில் நடுங்கிடும் குளிரெனிலோ
பொதிநெருப்பாக விளங்கிடுவேன்.

ஒவ்வொரு நாளா யோயாமல்
ஓடித் தொலைந்திடும் வாழ்நாளில்
இவ்விதம் வாழ்ந்திருந் திறப்பதிலே
இம்மியும் தவறே னினி நானே !

172