பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞன் வெள்ளியங்காட்டான்


முயற்சி


முயலுக, நன்கு முயலுக ! - முழு
முச்சில் முயன்றிடுக !
பயி லுங் கலைக ளனைத்திலும் - பெரும்
பயனை விளை த்திடுக !

காரிருள் கவ்வினும் வாழ்க்கையில் - துளி
கலக்கமில்லாதவனாய்ச்
சீரிய ஞான விளக்கினால் அறிஞன்
சிறக்க முயலுகிறான் !

காட்டி லிரைநனி தேடவே - தனது
கண்ணின் மணிகளெனக்
கூட்டினிற் குஞ்சுகட் கூட்டவே - தினம்
குருவி முயல்கிறது !

தின்னும் பொருளெனத் தேர்ந்ததும் - தேவை
தீர்க்க விரும்புகிற
சின்னஞ் சிறுசிற் றெறும்பதைப் - புற்றில்
சேர்க்க முயல்கிறது !

காலைப் பொழுதி லிருந்துதான் - மாலைக்
கங்குல் கவியும்வரை
சோலை மலர்மது சேர்க்கவே - ஈயும்
சொக்கி முயல்கிறது !

உற்ற நலன்கள் உதறியே - ஊன்றி
உண்மை யுணர்ந்தொழுகிக்
கற்றவர் நெஞ்சம் கமழவே - கவிஞன்
கருதி முயலுகிறான் !

எல்லையில் லாத வெளிதனில் - இருந்
தெங்கு மிருளகல
நல்லொளி நல்கும் பருதியும் - வானில்
நாளும் முயல்கிறதே !

173