பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


புத்தாண்டு

கால மென்னுமழி யாத கன்னியவள்
கவினு றக்கரு வுயிர்த்தனள் !
ஞால மின்னொருபுத் தாண்டு கண்டதென
நவின்று மெய்புளக மெய்தவே !

ஆறு பொழுதுபெரிதான கூதிர்கார்
அழகு வேனில்பனி மாதமாய் ;
ஆறு பொழுதுசிறி தான காலை பகல்
அந்தி யாமமெனும் பே தமாய் !

துன்புறுத்துமிருள் தொலைய வானமதில்
தோன்றி வந்தவிடி வெள்ளியாய்
இன்புறுத்திடவும் வந்து தித்ததென
இதயம் பொங்கிக்களி கொள்ளுதே !

மூன்று நூறுமிரு முட்ப தைந்து டனும்
முருகு மலரிதழ்கள் நாளென
தோன்று நூலில்தொகுப் பாகித் துன்பமறத்
துலங்கி மன்னுயிரை யாளவே

பொன்ன விர்ந்தபுது வருட மின்றெனவும்
போற்றி யகமகிழப் புல்லுவோம் !
பன்னரும் நலனு முன்னில் தோன்றுமெனப்
பரவசத் துடனும் சொல்லுவோம் !

உள்ள மெனும்மலரில் ஊறும் மதுவெனவே
உணர்ச்சி பொங்கியொரு பாடலாய்ப்
பள்ளி நீத்தகுயில் பாட வண்டுதுணைப்
பண்ணி சைக்கம்பி லாடலாய்,

வாழ்த்தி சைத்துவர வேற்கும், ' எங்களது
வாழ்க்கை யென்னும்பூங் கொத்திலே
ஊழ்த்த நறுமலரே உய்க்க! ஒன்றிநனி
உலக மெய்திடுமின் பத்திலே !

177