ஒரு எழுச்சி, ஒரு குழைவு, ஒரு நெகிழ்வு. ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றிற்கு அழுத்தமாக எழுத்தில் வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதை வடிவுக்கு 'லிரிக்' என்று ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. தமிழ்க் கவிதைத் துறையில் முத்தகம் என்றும் குளகம் என்றும் கூறப்படும் வகைகள் இந்த இனத்தைச் சேர்ந்தன வாயினும் அவை லிரிக் ஆகிவிடமாட்டா. இதைக் குறிக்கும் தமிழ் வார்த்தை இனிமேல் கண்டுபிடிக்கப்படவேண்டும்.
பாரதிக்குப் பின்னரே 'லிரிக்' எழுதும் முயற்சி நம்மிடை தோன்றியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவ நிலையைப் பிறந்த மேனியாக அழகுணர்ச்சியுடன் வெளியிடும் முத்துக் கவிதைகள் இவை.
வெள்ளியங்காட்டானுடைய கவிதைகள் சிலவற்றை 'தியாகி'யில் வெளியான போதே படித்துப் பார்த்த போது அவரிடம் லிரிக் கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதை அறிந்தேன்.
அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளியாவது குறித்து மகிழ்கிறேன். கவிதைகளில், கவிஞனுடைய வியப்பு வேதனைகள் வெளியாகும் போது, அவற்றின் ஊடே உயிர் ஏக்கம் ஆழத்தில் இழைந்து சுருதி கூட்டுவதே லிரிக் கின் தனிச்சிறப்பு. அந்த எல்லையைத் தாண்டி "பலச்ருதி" கூறுவது போல "எனவே இப்படி செய்க... அல்லது இதன் பயன் இன்னது" என்பது போன்ற அறவிளக்கம் அல்லது பயன் கூறல் கவிதையில் வருமாயின் கலைமாற்று சற்று குறையத்தான் செய்யும், பிரசாரக் கவிதைகளில் இது தவிர்க்க முடியாதது தான். கலையே ஒரு நிலையில் உயிர்த் துடிப்பின் பிரசாரம் தானே. ஆயினும் பிரசாரம் என்பது தனியாகத் தலையை நீட்டிக் கொண்டு வெளியே வராமல் கலையின் ஜீவ ஒட்டத்துடன் கலந்திருப்பதுதான் மேலான இன்பம் பயப்பதாகும். கலையின் வடிவான உயிர்த் துடிப்பின் உன்னதப் பிரசாரமும் கூட.
வெள்ளியங்காட்டான் அவர்களிடமிருந்து ரஸிகர்கள் சிறந்த
கவிதைகள் பலவற்றை எதிர்பார்க்க இடமிருக்கிறது.
16