பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


குடியரசு

அற்புத மானதோர் கற்பனைக் காவிய
மாக மலர்ந்திருக்கும் - எங்கள்
பொற்பு மிகுந்த குடியர சே உனைப்
போற்றிப் புனைந்திடுவோம் !

தூண்டும் பகைமை யுணர்ச்சி வயத்தராய்த்
தோன்றிய மன்னவர்கள் - உன்னை
ஆண்டிரு நூறு வரையிலு மந்நியர்க்
காட்படச் செய்துவிட்டார் !

தன்னுதி ரத்தி லுதித்த தனையன்
தவறித் தவித்ததொரு - தள்ளா
அன்னை நிலைதனி லுன்னை யடைந்திட
அல்லும் பகலுழைத்தோம் !

ஏந்திய கொள்கை யிணையற்ற வீரம்
இதயத்தில் வைத்தவரால் - இன்று
மாந்தர்களுன்னை மறுபடி கண்டு
மகிழ்ந்திடப் பெற்றனர்காண் !

அகிலத்தில் வாழும் குடிகளுக் கென்றும்
அரசுயி ராமெனவே - ஆழச்
சகலத்தை யுங்கற்ற மோசிகீ ரன்மொழி
சான்று பகிர்கிறதே !

கண்ணினி லிட்டுக் கருத்தினில் வைத்துக்
கவினுறக் காத்திடுவோம் - இந்த
மண்ணி லொரேவொரு ஆணெனப் பெண்ணென
மானிட முள்ளளவும் !

ஊழியு சாந்தமு மொப்பற வோங்கியே
உண்மைக் குறைவிடமாய் - உய்த்து
வாழிய எங்கள் குடியர சே இனி
வையகம் வாழ்ந்திடவே !

187