பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. சீநிவாசராகவன்
(கவிஞர் நாணல்)


' கலந்துண்ண வாரீர் '

வெள்ளியங்காட்டான் அவர்களை எனக்கு நேரில் தெரியாது. அவ்வப்போது அவருடைய பாடல்களைத் தியாகியில் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் பாடல்களை மற்றவர்களுக்குச் சிபார்சு செய்ய இது போதாதா என்று தியாகி ஆசிரியர் எண்ணுகிறார். உண்மைதானே? பாடல்கள் யார் எழுதியவையானால் என்ன, நன்றாயிருந்தால் அனுபவிக்க வாருங்கள் என்று எல்லோரையும் அழைப்பதில் தவறில்லையே? ஒரு வகையில் விமர்சகன் கலந்துண்ணக் கரையும் இலக்கியக் காக்கை தானே!

என்றாலும் காக்கையின் குரலுக்கு இனிமை ஏது? இதோ கவிஞர் வெள்ளியங்காட்டான் பேசுகிறார், மலையைப் பற்றி, கேளுங்கள்:

       பருவ காலத் தருணி போலப் பருவதம் துலங்குது
       புருவ நடுவில் திலகம் போலப் பொழுதிருந் திலங்குது
       கருத்த கூந்தல் விரித்ததென்னச் செறிந்து மேகம் தவழுது
       பொருத்தங் கண்டு சிரித்த தென்னங் குருத்து மின்னல் துவளுது

கவிஞருடைய பார்வையில் மலை, மடந்தையாக மாறிவிடுகிறது நம்முடைய பார்வையிலுந்தான், அவருடைய சொற்களைக் கேட்டவுடன். இது போலவே அவருடன் நின்றால், வற்றிச் சுரப்பதே வாழ்க்கையாய்க் கொண்டு - வையக மீதில் இருக்கும் குளத்தையும்

17