பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

எனவேதான் மரபு இலக்கியங்களை அந்நியப்படுத்திவிட்டு சமூகத்தைச் சரியாக மதிப்பீடு செய்ய முடியாது.

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கவிதைகள் எனக்கு அறிமுகமான சூழல் இனிமையானது. குயில் கூவும் மாஞ்சோலை ... இருள் நிழல் படர்ந்த தென்னந்தோப்பு .... மணம் வீசும் மலர்ச்செடிகள் ... இப்படி ரம்மியமான சூழலில் ஒரு மாலை நேரத்து மழை நாளில், நானும் தோழர் டி. மணியும் கவிஞரின் அனைத்து படைப்புகளையும் புரட்டிப் பார்த்து பரவசப்பட்டோம். அதனுள் பயணிக்கிற போது கவிஞனின் கனவு தேசங்கள் விரிந்து பரந்து கிடைப்பதைக் காண முடிந்தது.

இப்படியான கவிதைக் களஞ்சியங்கள் அதிர்வு அலைகள் இன்றி அமிழ்ந்திருந்ததற்கு, கவிஞர் எழுதிய காலத்தில் இருந்த சமூக அடுக்கு முறையின் இறுக்கமும் ஒரு காரணம். குறிப்பிட்ட சமூகப் படைப்பாளிகள் ஒட்டுச் சிறகுகளோடு தத்திப் பறந்து அறிவு ஜீவி வட்ட பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அதனுள் வேறு யாரும் பிரவேசிக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இருப்பினும் மண்ணின் மணத்தோடு கவிஞரின் கவிதைப் பயணம் நீண்டு சென்றுள்ளது.

கவிஞரின் கவிதை உலகம் அலாதியானது; தனித்துவமானது; பளிச்சென்று பரவசப்படுத்தும் விண்மீன்களைப் போன்றது. இசைப்பாடலும், வெண்பாவும், அறுசீர் விருத்தமும் சங்கமித்து ஒடுகின்றன. கவிஞரின் பாடுபொருள் இயற்கை, சமூகம் என விரிவடைந்து செல்கிறது. மொழியுணர்வு தீவிரமாக முகம் காட்டுகிறது. பகுத்தறிவும், பொதுவுடைமைச் சிந்தனையும் கவிஞரின் வாழ்வியல் கருத்தோட்டமாகவும் இருந்திருக்கிறது. அவை படைப்புகளிலும் சமரசமின்றிப் பிரதிபலிக்கிறது. அடிமைத்தளத்தையும், பழைய சம்பிரதாயங்களையும் கட்டு உடைக்கும் கனத்த கவிதைகளில் கனல் தெறிக்கிறது.

எழுத்து ஒரு போராடும் கருவி என உணர்ந்து சமுதாயத்திற்கு எதிரானவற்றைத் தகர்க்க அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பான் மாக்சிம் கார்க்கி. இதனை நன்கு உணர்ந்திருக்கிறார்

கவிஞர். சமூகத்தின் அவலங்களையும், பழைய மதிப்பீடுகளையும் ஆழ் மன விசாரணைக்கு உட்படுத்தி தனது கவிதைகளில் பதிவு

193