பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

 செய்கிறார். அவற்றை நிகழ் முறைப்படுத்தத் தொடர்ந்து போராடியும் இருக்கிறார். நான் போராடிக்கொண்டிருக்கிறேன் என்பார் கவிஞர் தமிழ்ஒளி . அப்படியான ஆன்மக்குரல்கவிஞர் வெள்ளியங்காட்டானிடமும் ஒலிக்கிறது. பாரதியின் வாழ்வியல் கூறுகளின் தொடர்ச்சியைக் கவிஞரிடமும் காண முடிகிறது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியின்றி வாழ்தலில் போராடியவர்.

ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய காவியப் படைப்புகள்தான் என்ற கவிஞர் தமிழ் ஒளியின் வார்த்தை நினைவிற்கு வருகிறது. அப்படியான வாழ்தலில் பத்துப் படைப்புகளைத் தமிழ் இலக்கியத்திற்குத் தந்திருக்கிறார் கவிஞர் வெள்ளியங்காட்டான்.

கவிஞரின் முதல் கவிதைத் தொகுதி இனிய கவிவண்டு' 1948-ல் வெளிவந்தது. அது நாற்பதுகளின் தொடக்கத்தில் பல்வேறு இதழ்களில் வெளி வந்த இசைப்பாடலின் தொகுப்பாகும். இரண்டாவது கவிதைத் தொகுதி 'எச்சரிக்கை' அச்சு வடிவம் கண்டு சமூகத்திற்குச் சென்றடையாமல் போனது. கால வறுமை, 'எச்சரிக்கை' நூலின் ஒரு பிரதியைக் கூட விட்டு வைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக கவிஞன் (1967), தாயகம் (1974), அறிஞன் (1977), தமிழன் (1979), பரிசு (1980), புரவலன் (1984) போன்ற கவிதை நூல்கள் வெளிவந்தன. துணைவி, கவியகம் கையெழுத்துப் பிரதியாகவும், தலைவன் தட்டெழுத்துப் பிரதியாகவும் விடியலுக்காக விழித்துக் கொண்டிருக்கிறது.

கவிஞர் கவிதையில் மட்டுமல்லாமல் குறுநாவல் பக்கமும் பார்வையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 'இருளும் ஒளியும்' என்ற குறுநாவல் தொகுப்பில் ஐந்து நெடுங்கதைகள், கதை வானில் கண் சிமிட்டுகின்றன.

கவிஞர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலத்தில் தங்கிக் கன்னட மொழியைக் கற்றுக் கொண்டும், கன்னட இலக்கியங்களை மொழி பெயர்க்கும் முயற்சியில் முனைப்பு காட்டியுமிருக்கிறார். குழந்தைகளுக்கான அறுபது நீதிக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.

194