உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துள்ளும் கன்றெனவே- மண்ணில் - துகளெழுப்பி வரும் பள்ளிப் பிள்ளைகளையும், அரசன் ஆண்டி என்று - அணுவும் பேதமின்றி.சரிசமான இன்பம்- தந்து-தனது இயல்பு நாட்டும் மலர்களையும் காண்கிறோம்.

இயற்கையின் அழகை அனுபவித்து எடுத்துக் காட்டுவது போலவே மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளைப் பற்றியும் இலட்சிய வாதியாக நின்று வெள்ளியங்காட்டான் பேசுகிறார். சுயநலமும் போட்டியும் சேர்ந்து அன்பையும் அருளையும் அழிக்க முற்படுவதைக் கண்டு பொருமுகிறார்.


உயிர்கட் குறுதியாய் - அறிஞர்
உண்டுபண்ணின
பயிரழிகிறதே - தருமப்
பயிரழிகிறதே

வயல் வெளிகளிலே - அன்பு
வடிவு நெல்லெல்லாம்
சுயநல எருமை- அந்தோ
சூறையாடுதே

தோட்டக் காட்டிலே - கருணைச்
சுவைக் கரும்பெலாம்
போட்டிக் குறுநரிகள் - கடித்துப்
பொங்கல் பண்ணுதே

என்ன செய்வது?

அயர்வும் மயக்கமும் நீக்கடா - நெஞ்சில்
ஆண்மையறிவினைத் தேக்கடா
உயர்வே உயிரென ஊக்கடா - உன்னை
உண்மை மனிதனா யாக்கடா

அதற்குத் துணிவு வேண்டாமா ? கவிஞர் துணிகிறார் ?

18