பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

போட நாங்கள் இருவரும் குருவின் முன், சீடர்களாய் அமர்ந்தோம். அப்பொழுதும் அவர்தாம் 'வெள்ளியங்காட்டான்' என்று உறுதியாக நம்பாமல் 'கவிஞர் வெள்ளியங்காட்டான்' என்றதும் 'நான் தான் அந்தக் காட்டான்' என்றார்! வியப்புடன் "ஐயா! எங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பெரியவராக இருப்பீர்கள் என்று தெரியாமல் ஏதேதோ கடிதத்தில் எழுதி விட்டேன். என்றேன்.

அவருக்கும் அதே போல வியப்பும் மகிழ்ச்சியும். நாங்கள் இளைஞர்களாக இருந்ததால் எங்களைப்பற்றி அவர் உசாவினார். அவர் தம் குடும்பத்தைப்பற்றியும் எங்களுக்குக் கூறினார். அன்று முதல் எங்கள் எழுத்து உலகின் ஈடிலா ஆசானாக அவரை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

புறநானூற்று வீரம், கலீல் ஜிப்ரான் கருத்துகள், கம்பனின் கவிநயம், பாரதியார் பாடல்களின் புதுமை, கலித்தொகைக் காட்சி நயங்களையும், வளங்களையும், எங்கள் முன் படம் பிடித்துக் காட்டியது போல் பாடம் நடத்தினார். "மா வாராதே! மா வாராதே" -என்ற புறநானூறு. "இந்நிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன் நிழலை கொடுத்து அளிக்கும் மான்” - கலித்தொகை. இயற்கையோடு இயைந்த தாய்மை நெஞ்சம் - ஜிப்ரான். 'ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆள..... குகனோடு ஐவரானோம், - கம்பர். 'விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே' - பாரதியார். என்று ஆசிரியர் பாடம் நடத்தினார். மாணவர்கள் நாங்கள் கேட்டோம்.

மதியம் உணவு பரிமாறப்பட்டது. வாருங்கள் உண்ணலாம் என்றார் அவர் புதல்வி. உண்டபின் மீண்டும் இலக்கியம் கவிதைப்பற்றிய அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்திய உலக அரசியல் வரலாற்றுப் பாடமும் - பண முதலைகளின் படாடோபும், முகமன் பேசி மயக்கும் வஞ்சகர்கள், மூடத்தனம், மதத்தின் பெயரால் நடைபெறும் மடமைகள், கையூட்டு பரிந்துரைகளால் காலம் தள்ளும் பட்டதாரிகள், இலக்கிய போலிகளின் முகத்திரைகளைக் கிழித்து வீசினார். பகுதறிவுச் சிந்தனைகள், உண்மையான ஆன்மீகக் கோட்பாடுகள் பற்றி எல்லாம் அவர் கூறிய கருத்துக்கள் எங்கள் உள்ளங்களில் ஆழப் பதிந்தன.

198