பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

பணத்தைப் பறிக்கொடுத்து விட்டு நடந்தே சென்றுச் புளியம்பட்டியை அடைந்தோம். காலையில் புறப்பட்ட நாங்கள் இரவு ஏழு மணிக்குச் சென்றடைந்தோம். கடுமையான கோடை வெயிற்காலம். அவர்தம் மாப்பிளையும், மகளும் எங்களை அன்புடன் மகிழ்ச்சியாக வரவேற்று விருந்தோம்பி மகிழ்வித்தார்கள். அங்கு பழனி என்பவர் கவிஞரின் பாடல்களை மெட்டமைத்து பாடிக் காட்டியது எங்களுக்கு வழிநடைக் களைப்பை மாற்றி விட்டது எனலாம்.

மறுநாள் காலையில் எங்களிடம் காசு இல்லை என்பதை எப்படிக் கூற இயலும்?. அவர்களோ எங்களை உயர்ந்த நிலையில் மதித்து விருந்தோம்பி மகிழ்கிறார்கள். எங்கள் நிலையை வெளிப்படுத்த நாணம். அவர்கள் தொடர்ந்து பேருந்து நிற்பிடம் வரை வந்து பேருந்திலும் ஏற்றி விட்டனர். கொஞ்ச தூரம் சென்றதும் "பணத்தை மறந்து விட்டு வந்து விட்டோம்; இறக்கிவிடுங்கள்” என்று நடத்துநரிடம் சொல்லி இறங்கி நடந்தோம்! நடந்தோம்! கரடிவாவி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், பட்டணம், வெள்ளlலூர், போத்தனூர் வழியாக சுந்தராபுரம் மாச்சம்பாளையம் வந்து சேர்ந்தோம்! கால்களில் செருப்பு இல்லை. இரண்டு கால்களும் கொப்பளித்து விட்டன. நடக்க முடியாமல் தள்ளாடி வீடு வந்தோம். நண்பர் அழகுதாசனின் இரண்டு தொடைகளும் உராய்ந்து உராய்ந்து கொப்புளமாய்ச் செம்பொன் பட்ட காட்சி இன்றும் என் கண் முன் நிற்கிறது. அந்த ஒருநாள் நிகழ்ச்சியை என்றும் மறக்க முடியாது.

200