பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிஞ்சு நாட்பட முற்றிக் கனிந்ததும்
பிணைப்பு நீங்கி பிரிந்திடும் காட்சியை
நெஞ்சி லூன்றி உணர்ந்ததன் பின்புதான்
நீணிலந்தனில் வாழத் துணிகிறேன்.


இதெல்லாம் இலட்சியங்களைப் பற்றிய பேச்சு. சாதாரணமான வாழ்க்கைச் சம்பவங்களில் தோய்ந்து, அதனால் ஏற்படும் உணர்ச்சிகளையும் கவிஞர் வெளியிடுகிறார். ஏழை ஒருவன் வறுமையின் காரணமாகத் தன் குழந்தை கேட்கும் பொருளை வாங்கித் தர முடியாமல் இல்லை என்கிறான். குழந்தை அழுதுகொண்டு வெளியே செல்கிறது. திரும்பி வரவில்லை. பெற்ற மனம் பித்தாகிறது.


கொத்தாரும் பூம் பொழிலில் ஒடியாடி
குடுகுடுவென வந்தெனது மடியில் குந்தி
செத்தாருக் குயிரூட்டும் தமிழ்வாய் தன்னில்
தேனொழுக இளங்குதலை மொழியால், அப்பா !
முத்தாரம் வாங்கித்தா என்றாள், அம்மா
முடியாதென் னாலென்றேன். உடனே பொத்தல்
சித்தாடை யால்கண்ணை ஒற்றிக் கொண்டே
சென்றவள்தான் வரவில்லை எங்கோ காணோம்!


உண்மையான உணர்ச்சியைத் தாங்கி வருகின்றன இச்சொற்கள். அடுத்த பாட்டிலே, தீராத, யாராலும் தீர்க்க முடியாத ஆசையின் துயரம் தோய்கிறது. உணர்ச்சி கவிதையாகி விடுகிறது.

மண்ணிடையே வெண்ணிலவில் வட்டம் சுற்றி
மலர்க்கரத்தின் இதழ் விரலால் சுட்டிக்காட்டி
விண்ணிடையே மிளிர்கின்ற தங்கத்தட்டு
விலையில்லை எடுத்துத்தா, அப்பா என்றாள்.

19