கொத்தமங்கலம் சுப்பு
’கவிதைக் கோயில்’
கோபுரங்களைப் பார்க்கும் போது வெறும் அழகு மட்டும் தென்படுவதில்லை. கோயில் மணியைக் கேட்கும்போது வெறும் ஒலி மட்டும் செவி புகுவதில்லை. இரண்டிலும் இதயத்திற்கு இன்பமளிக்கும் ஏதோ ஒன்று இருப்பதைக் காண்கிறோம். பாடலும் இந்த இனத்தைச் சேர்ந்ததுதான். சொல் அழகு மட்டும் இருந்தாலும் போதாது. கருத்து மட்டும் இருந்தாலும் போதாது. சொல்லும், கருத்தும் அளவோடு கலந்து, சுவையும் பொருளும் உடையதுதான் பாடல். இந்தப் பாடலிலே எத்தனையோ விதங்கள் இருக்கலாம். இருந்தால் என்ன? காசிக்கோயிலும், காஞ்சிக் கோயிலும் பர்மாவிலுள்ள புத்த விஹாரமும், வேளாங்கண்ணிக் கோயிலும், நாகூர் பள்ளியும் உருவத்தில் வேறுபட்டவைதான். ஆனால் கருத்தழகில் ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவோம்.
கடவுள் உலகத்தை வாழ வைக்கிறார் என்பது நம்பிக்கை. கருத்து, உலகத்தை வாழ வைக்கிற தென்பது கண்கண்ட உண்மை. கடவுளுக்குக் கல்லாலே கோயில் கட்டி அணிமதிலும் ஆயிரக்கால் மண்டபமும் எடுக்கிறோம். மிகவும் சிறிய இடத்தில் இருளும் ஒளியும் கலந்து விளையாடக் கடவுளைப் பிரதிஷ்டை செய்கிறோம்.